Published : 14 Jan 2024 03:52 PM
Last Updated : 14 Jan 2024 03:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியை கேட்டு பெறுவோம் என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக சார்பில், ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றுகின்ற கிராமிய இசை, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் 300 பெண்கள் பங்கேற்று கொண்டாடிய இந்த சமத்துவ பொங்கல் விழாவை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தொடங்கி வைத்தார். ஊசுடு தொகுதி செயலாளர் இளஞ்செழியப் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
பின்னர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்தி வருகின்றோம். அதன்படி இந்தாண்டு ஊசுடு தொகுதியில் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வரும் காலத்தில் கருணாநிதி வழியில், மு.க.ஸ்டாலின் காட்டுகின்ற திசையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம். அந்த தேர்தலில் நிச்சயமாக எங்கள் கட்சித் தலைவர் நினைக்கின்ற, மத்தியில் எந்த ஆட்சி வரக்கூடாது என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்றாரோ அந்த ஆட்சியை ஒழித்துவிட்டு, நாம் நினைக்கின்ற ஆட்சி வருவதற்கு பாடுபடுவோம்.
கருணாநிதி தலைமையில் எப்படி மதசார்பற்ற கூட்டணி வருவதற்கு பாடுபட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோமோ அதேபோன்று ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே உற்று நோக்குகின்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். அந்த தேர்தலில் நிச்சியம் வெற்றி பெறுவோம். தேர்தலை சந்திக்க இந்தியாவிலேயே திமுகதான் முதலில் தயாராக இருக்கிறது. அதன்பிறகு தான் எல்லாம். புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக மழை பெய்து வருகிறது. புயல், மழை நிவாரணம் கேட்டோம். மத்திய குழுவினர் புதுச்சேரிக்கு வந்து பார்வையிட்டனர். ஆனால் இதுவரை ஒரு சல்லிக்காசுக்கூட மக்களுக்கு தரவில்லை.
பயிர்கள் நன்று வளர்ந்திருந்தபோது, பருவம் தவறி பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போதும் சரி, இப்போதும் சரி புதுச்சேரி அருகில் உள்ள தமிழக பகுதிகளில் நிவாரணம் கிடைத்திருக்கிறது. ஆனால் புதுச்சேரி மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமோ, விவாயிகளுக்கான காப்பீடு, பாதுகாப்பு திட்டமோ கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் நாங்கள் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. இங்கு பலமுறை திமுக ஆட்சியில் இருந்துள்ளது. எங்கள் கட்சியின் எம்பி வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே இங்கு போட்டியிட கேட்பது எங்களின் உரிமை. ஆனால் எங்கள் தலைவர் என்ன முடிவு எடுக்கின்றாரோ அதனை கேட்டு செய்வோம். நிச்சயம் சீட்டு கேட்டு பெறுவோம்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT