Published : 14 Jan 2024 10:41 AM
Last Updated : 14 Jan 2024 10:41 AM
சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா”-வை சென்னை தீவுத் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமி நாதன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.கே. சேகர் பாபு, டி.ஆர்.பி. ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் த.வேலு, இ.பரந்தாமன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம் மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம்,
கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணா நகர் கோபுரப் பூங்கா, கோயம் பேடு ஜெய் நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி.விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT