Published : 14 Jan 2024 05:43 AM
Last Updated : 14 Jan 2024 05:43 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 8 லட்சம் பேர் பேருந்து, ரயில்களில் புறப்பட்டு சென்றனர். கடைகளில் புத்தாடை, புதுப்பானை, மஞ்சள், இஞ்சி கொத்து விற்பனை அமோகமாக நடந்து வருவதால், பண்டிகை களைகட்டியுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று போகியுடன் தொடங்கியது. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நேற்று சனிக்கிழமை முதல் அடுத்த வாரம் புதன்கிழமை வரை தொடர் விடுமுறை வருவதால், பலரும் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட திட்டமிட்டு, பயணத்தை தொடங்கியுள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னைஉட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கியநகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் 2,100 பேருந்துகள், 1,260 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,360பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் மொத்தம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என 5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
சென்னை வண்டலூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். வீட்டுவசதி துறை செயலர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து விரைவு பேருந்துகளை பிடிக்க இலவச மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. நடமாடும் ஏடிஎம் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட 6 இடங்களில் இருந்துபேருந்துகள் புறப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து முன்பதிவு செய்தவிரைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், முன்பதிவு செய்யாத பயணிகள் அங்கு சென்றும், முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு வந்தும் அவதிக்குள்ளாகினர்.
வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் செல்வோர் பூந்தமல்லிக்கு பதிலாககோயம்பேடு வந்தும், திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கு பிற்பகல் முதலே கோயம்பேட்டில் இருந்துபேருந்து இயக்கப்படும் என்பது தெரியாமலும் பயணிகள் அவதியடைந்தனர்.
ரயில்களில் அலைமோதிய கூட்டம்: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு வந்தே பாரத் ரயில், குருவாயூர், வைகை உள்ளிட்ட பகல் நேர ரயில்கள், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, பாண்டியன், சேரன்,நீலகிரி உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு கடந்த 2 நாட்களில் பேருந்து, ரயில், விமானங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு பேருந்து, ரயில்கள் இன்றும் இயக்கப்படுகின்றன.
விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளில் வழக்கம்போல கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இதனால்,திடீர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டவர்கள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் நேற்று புறப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உட்பட பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் தியாகராய நகர், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், ஜாம்பஜார், தாம்பரம் மற்றும் கோவை, திருச்சி, மதுரை, சேலம்உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகள், சந்தைகளில் புத்தாடை, புதுப்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தேங்காய், வாழைப்பழம், பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT