Published : 14 Jan 2024 06:18 AM
Last Updated : 14 Jan 2024 06:18 AM
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து, வெள்ள நிவாரண தொகை ரூ.37,907 கோடியை விரைந்து வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். மத்திய குழுவினரின் அறிக்கை கிடைத்தவுடன், பாதிப்புக்கு ஏற்ப 27-ம் தேதிக்குள் நிதி வழங்கப்படும் என அமித் ஷா உறுதியளித்ததாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 வட மாவட்டங்களும், டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.
மத்திய குழு ஆய்வு: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரிய நிவாரண தொகை வழங்குவதாக உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். முன்னதாக, மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினரும் ஆய்வு செய்தனர்.
இந்த இரு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்காக 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடி, 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரண தொகை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. முதல்வர் ஸ்டாலின்கடந்த மாதம் டெல்லி சென்றபோதும், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். திருச்சியில் கடந்த 2-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழக மழை பாதிப்புகள், சேதங்கள் தொடர்பாக குறிப்பிட்டு, தனது வேதனையை பதிவு செய்தார்.
இந்த சூழலில், நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைதமிழக எம்.பி.க்கள் சந்திக்க கடந்த வாரம் நேரம் கேட்கப்பட்டது. ஜனவரி 13-ம் தேதி (நேற்று) அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கே.ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), து.ரவிக்குமார் (விசிக), நவாஸ் கனி (முஸ்லிம் லீக்), ஏகேபி சின்னராஜ் (கொமதேக) உள்ளிட்ட எம்.பி.க்கள் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். தமிழக அரசு கோரியுள்ள ரூ.37,907 கோடி நிவாரண தொகையை உடனே வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
விரிவான அறிக்கை வழங்கல்: பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வழங்கப்பட்டது. தமிழக அரசு கோரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தில் வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதை தான் நன்கு உணர்ந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
தமிழக மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் ஜனவரி 21-ம் தேதிக்கு பின்னர் அறிக்கை அளிக்க உள்ளனர்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன், நிதி, விவசாயம் உள்ளிட்ட துறைகளுடன் ஆலோசித்து பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப விரைவில் நிதி விடுவிப்பதாக உறுதியளித்தார். தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிதி அளிக்குமாறு கேட்டதன்பேரில், மிக விரைவாக அளிப்பதாகவும் உறுதியளித்தார். எவ்வளவு கொடுக்க முடியுமோ அந்த நிதியை 27-ம் தேதிக்குள் வழங்குவதாக உறுதியாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
‘தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை’ : டெல்லியில் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது: தமிழக மழை, வெள்ள பாதிப்புக்கு ரூ.37,907 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் ஏற்கெனவே நேரில் வலியுறுத்தி உள்ளார். அவர்கள் புறக்கணிப்பதாக இருந்தால், தமிழகத்துக்கு இத்தனை குழுக்களை மத்திய அரசு அனுப்பி இருக்காது.
மத்திய நிதி அமைச்சரும் இப்போதுதான் முதல்முறையாக நேரில் வந்து வெள்ள சேதத்தை பார்வையிட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த பேரிடரையும் நிதி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டது இல்லை. எனவே, மத்திய அரசு தமிழக அரசை புறக்கணிப்பதாக கூற முடியாது. அமித் ஷா உடனாக சந்திப்பு மிகவும் நிறைவாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT