Published : 14 Jan 2024 06:29 AM
Last Updated : 14 Jan 2024 06:29 AM

அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய பெண் வங்கி ஊழியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு: மதுரையில் கவுரவிக்கப்படுவார் என அறிவிப்பு

வங்கி ஊழியர் பூரணம்மாள்

சென்னை: மறைந்த மகள் நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடிமதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் பூரணம்மாளை தொலைபேசியில் அழைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூரணம்மாள். இவர் கனரா வங்கியில் எழுத்தராக உள்ளார். இவரது மகள் ஜனனி 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

அவரது நினைவாக, கொடிக்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்கு 1.50 ஏக்கர் நிலத்தை பூரணம்மாள் வழங்கினார். ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தொலைபேசியில் பூரணம்மாளை தொடர்பு கொண்டு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

அரசுப் பள்ளிக்கு 1.50 ஏக்கர்நிலத்தை வழங்கிய ஆயி என்றபூரணம்மாளை வணங்குகிறேன். மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது செல்வ மகளான மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையை போற்றுகிறேன்.

ஜன.29-ல் பாராட்டு விழா: ‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எனும் பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம்மாளின் தொண்டு மகத்தானது.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மதுரையில் ஜனவரி 29-ம் தேதி நடைபெற உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம்மாள் சிறந்த முறையில் கவுரவிக்கப்பட உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x