Published : 14 Jan 2024 06:22 AM
Last Updated : 14 Jan 2024 06:22 AM

மொழிப்போர் தியாகிகளுக்கு ஜன.25-ல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: சென்னையில் முதல்வர் பங்கேற்கிறார்

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜன.25-ம் தேதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்ட அறிக்கை: உலக வரலாற்றில் நாட்டின் விடுதலைக்காகவும், இனப் போராட்டத்துக்காகவும் தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பலர். ஆனால் ஒரு மொழிக்காக தங்களது வாழ்க்கையையே சுருக்கி கொண்டு கருகியவர்கள் தமிழக மக்கள் மட்டுமே.

அந்தவகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவுகூரும் வகையில் ஜன.25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சென்னை அண்ணாநகரில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவடியிலும், டி.ஆர்.பாலு எம்.பி., மன்னார்குடியிலும், அமைச்சர் கே.என்.நேரு திருச்சியிலும் பேசுகின்றனர்.

தென்காசியில் கனிமொழி கருணாநிதி எம்.பி, உரையாற்றுகிறார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் பகுதியில் நடைபெறும் வீரவணக்க பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். திருச்சி சிவா எம்.பி., கும்மிடிபூண்டியிலும், ஆர்.எஸ்.பாரதி உளுந்தூர் பேட்டையிலும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கோவையிலும் உரையாற்றுகின்றனர்.

இதேபோல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x