Published : 14 Jan 2024 04:16 AM
Last Updated : 14 Jan 2024 04:16 AM

செங்கோட்டை - ஈரோடு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சி, தென்காசியில் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

தென்காசி: செங்கோட்டைக்கு நீட்டிக்கப்பட இருக்கும் ஈரோடு - திருநெல்வேலி ரயில் கல்லிடைக்குறிச்சி மற்றும் தென்காசியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாவூர்சத்திரம், கடையம், அம்பா சமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, சேரன் மகாதேவி பகுதி மக்களும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் மதுரை செல்வதற்கு நேரடி ரயில் வசதி இல்லாத நிலை உள்ளது. ஈரோடு - திருநெல்வேலி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஈரோடு - திருநெல்வேலி ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என்று, கடந்த டிசம்பர் மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

அதில், ஈரோடு- திருநெல்வேலி ரயில் ( 16845 ) ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 9.45 மணிக்கு வந்து, செங்கோட்டைக்கு இரவு 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை- ஈரோடு ரயில் ( 16846 ) செங்கோட்டையில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு வந்து, அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டை மாலை 3 மணிக்கு சென்றடையும். மேலும் நீட்டிக்கப்படும் பகுதியில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர் சத்திரம் என 4 நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ரயிலுக்கு கல்லிடைக் குறிச்சி மற்றும் மாவட்ட தலை நகரான தென்காசியில் நிறுத்தங்கள் வழங்காததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று கல்லிடைக் குறிச்சி மற்றும் தென்காசியில் ஈரோடு - செங்கோட்டை ரயில் நின்று செல்லும் என்று, ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித் துள்ளது.

இது குறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டிய ராஜா கூறும்போது, “ஈரோடு - செங்கோட்டை ரயிலுக்கு கல்லிடைக் குறிச்சி தென்காசி நிறுத்தங்கள் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்காசி மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக உடனடியாக இந்த ரயில் நீட்டிப்பை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x