Published : 13 Jan 2024 06:49 AM
Last Updated : 13 Jan 2024 06:49 AM

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுங்கள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை: அடர் புகையை வெளியிடும் பொருட்களை எரிக்காமல் புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நமது முன்னோர்கள் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். அதன்படி, இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுகொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகை காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் ஏற்படும் அடர் புகையால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகஉள்ளது. மேலும், அடர் நச்சுவாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல்போன்ற பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் அடர் புகையை ஏற்படுத்தும் பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. இந்த ஆண்டும் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

போகி பண்டிகையின்போது சென்னையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், போகி பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் போகி நாளன்று 15இடங்களில் 24 மணிநேரமும் காற்றுதரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x