Published : 13 Jan 2024 06:18 AM
Last Updated : 13 Jan 2024 06:18 AM

சேலம் பெரியார் பல்கலை.யில் 14 மணி நேரம் போலீஸார் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சேலம்/சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துக்கு நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்திருந்த நிலையில், பல்வேறு துறைஅலுவலகங்களில் போலீஸார் 14 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது கருப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள பதிவாளர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் பெரியார் பல்கலைக்கழகம் வந்த தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி, பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற் றார். முன்னதாக, நேற்று முன்தினம் காலைமுதல் மாநகர காவல் உதவி ஆணையர் நிலவழகன் தலைமையில், 6 ஆய்வாளர்கள் மற்றும் 30 போலீஸார், முறைகேடு வழக்கு தொடர்பாக பல்கலைக் கழகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

துணைவேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித் துறை அலுவலகம், தமிழ்த் துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதயாள்யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் என 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்குத் தொடங்கிய சோதனை, இரவு 11 மணி வரை 14 மணிநேரம் நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜன. 19-ல் விசாரணை: பல்கலை.யில் விதிகளை மீறி நிறுவனம் தொடங்கியது. நிதி முறைகேடு, ஊழியர்களை சாதிப் பெயரைக் கூறி திட்டியது தொடர்பான வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து காவல் துறை கூடுதல்ஆணையர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், துணைவேந்தர் தரப்பு மற்றும்பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று கூறி, விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தது. மேலும், துணைவேந்தர் தரப்பில்பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று பட்டியலிடப்படவில்லை என்பதால், காவல் துறைதரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையில் ஆஜராகி, இந்தவழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்தார். சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால் துணைவேந்தர் ஜெகநாதனின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும்அவர் கோரினார்.

அதை ஏற்ற நீதிபதி, பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, வரும் 19-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x