Published : 12 Jan 2024 09:40 PM
Last Updated : 12 Jan 2024 09:40 PM
மேட்டூர்: கொங்கணாபுரம் அருகே ரெட்டிப்பட்டி அரசு பள்ளிக்கு கிராம மக்கள், பெற்றோர் சார்பில் சாரட் குதிரை வண்டியில் மேள தாளம் முழங்க கல்வி சீர்வரிசை வழங்கினர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த ரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பிரிவுகள் உள்ளன. இந்த பள்ளியில் மொத்தம் 137 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 7 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தமிழக அரசு மூட உத்தரவிட்டது.
பின்னர், பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தரமான கல்வி அளிக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் காரணமாக, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதும், மாநில அளவில் சிறந்த எழுத்தறிவு மையத்திற்கான விருதும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மேலாண்மை குழு, கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளிக்கு தேவையான நோட்புக், பேனா, சேர், டேபிள், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கினார்.
முன்னதாக, கொங்கணாபுரம் பிரிவு சாலையிலிருந்து பள்ளி வரை பொதுமக்கள் சாரட் குதிரை வண்டியில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு சென்றனர். நிகழ்ச்சியில், கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமார், குரும்பப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணி, பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள், பள்ளி மேலாண்மை குழுவினர், கிராம மக்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் கூறுகையில், “பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் மற்றும் பெற்றோர் வழங்கியது வரவேற்கத்தக்கது. கிராம பகுதி என்பதால் மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைப்பதில்லை. இது மாதிரியான நிகழ்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம், மாணவர்கள் மத்தியிலும் கல்வியின் அவசியம் புரிந்து, கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். இந்த நடைமுறையால் பள்ளி நவீனமாவதுடன் குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுகிறது. என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT