Published : 12 Jan 2024 05:59 PM
Last Updated : 12 Jan 2024 05:59 PM

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு முதல் ‘துணை முதல்வர்’ விவகாரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.12, 2024

பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு: 2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபண்டியனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் சனிக்கிழமை விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது: 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பத்தமடை பரமசிவத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது, உ. பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது, கவிஞர் பழனி பாரதிக்கு மகாகவி பாரதியார் விருது, கவிஞர் ம.முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முனைவர் இரா.கருணாநிதிக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை: முதன்மை அமர்வு நீதிமன்றம்: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி 3-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருந்தபோதும்கூட, ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றம் எதுவும் இல்லை என்பதால் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

“உதயநிதியை துணை முதல்வராக்க பில்டப் திருவிழா”: "தமிழக முதல்வரைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த பின்னரோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ, எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று. அதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம். உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது" என்று பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

“தமிழகத்தை விமர்சிக்க அண்ணாமலைக்கு தார்மிக உரிமை இல்லை”: “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார். மேலும், “தமிழகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எவ்வித தார்மிக உரிமையும் இல்லை” என்று அவர் ஆவேசமாக கூறினார்.

பொன்முடி, அவரது மனைவிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடநாடு வழக்கில் இபிஎஸ் சாட்சியப் பதிவு தாக்கல்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்தார்.

நாட்டின் நீளமான அடல் சேது கடல் பாலத்தை திறந்து வைத்த பிரதமர்: நாட்டின் நீளமான மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்பு கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்தப் பாலத்துக்கு அடல் பிகாரி வாஜ்பாய் செவ்ரி - நவ சேவ் அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் இந்த பாலத்தின் மூலமாக இரண்டு மணி நேரப் பயணம் இனி 15 - 20 நிமிடமாக குறையும்.

இம்பாலுக்கு பதிலாக தவுபாலில் ‘நியாய யாத்திரை’ தொடக்கம்: ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு பதிலாக, அம்மாநிலத்தின் தவுபால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. இம்பாலில் இருந்து யாத்திரையைத் தொடங்க அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

‘நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்’ - பிரதமர் மோடி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தான் வெள்ளிக்கிழமை முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். மேலும் மிகவும் புனிதமான, வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்வைக் காண நான் பாக்கியம் செய்துள்ளேன். முதன்முறையாக நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன். இந்த 11 நாட்கள் பூஜைக்காக மக்களின் ஆசியைக் கோருகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x