Published : 12 Jan 2024 07:58 PM
Last Updated : 12 Jan 2024 07:58 PM
மதுரை: மாநகர காவல் ஆணையர், தென்மண்டல ஐஜி மேற்பார்வையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சுமார் 3, 700 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்கள், திருச்சி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் உற்சாகமுடன் பங்கேற்கின்றன. 3 ஜல்லிக்கட்டு போட்டியிலும் மாடுபிடி வீரர்கள், ஏராளமான பார்வையாளர்களும் ஆர்வமுடன் பங்கேற்பது வழக்கம். காவல் துறை பாதுகாப்பும், வருவாய், கால்நடை போன்ற பிற துறையினர் பணிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்நிலையில், 3 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்புப் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பாதுகாப்புக்கான பட்டியல் தயாரித்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதன்படி,பொங்கல் தினத்தன்று ஜன.15-ல் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் மங்ளேசுவரன், பாலாஜி தலைமையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயரின் ஆலோசனையின்பேரில், மதுரை டிஐஜி ரம்யா பாரதி மேற்பார்வையில், மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விரு ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்கென ராமநாதபுரம், தேனி காவல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். 2 நாளிலும் மதுரை எஸ்பி தலைமையில் சுமார் 2,200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT