Published : 12 Jan 2024 05:28 PM
Last Updated : 12 Jan 2024 05:28 PM
கடலூர்: இந்திய விவசாயம் ஒரு பருவகால சூதாட்டம்’ - இந்த வார்த்தை மற்ற மாவட்டங்களுக்கு பொருந்துமோ இல்லையோ, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு எப்போதும் பொருந்தும். டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்துக்கும் இந்த வாசகம் பொருந்திப் போகும்.
பருவம் சரியாக இருந்தால், அதாவது நேரத்துக்கு மழை பெய்து, முறையாக வெயில் அடித்து, நீர் பாய்ச்சலும், அதன் பின் காய்ச்சலும் முறையாக அமைந்தால் இப்பகுதிகளில் விவசாயம் செழித்து விளங்கும். ஆனால், அவ்வப்போது முறையற்று பெய்யும் மழை, இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது.
கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அரசின் இலக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 26 ஹெக்டேராக இருந்தது. இதில், காவிரி டெல்டா பகுதிகளில் 47 ஆயிரத்து 477 ஹெக்டேரும், மாவட்டத்தில் டெல்டா அல்லாத பகுதியில் 45 ஆயிரத்து 176 ஹெக்டேரும் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பும் செய்திருந்தனர்.
நீர்வரத்து குறைவால், சென்ற ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால், கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். தொடர்ந்து வடக்குராஜன் வாய்க்கால் மற்றும் வீராணம் ஏரி கிளை வாய்க்கால்களில் வந்த குறைந்தளவு தண்ணீரை ஒரு மணிக்கு ரூ. 200 கொடுத்து, மின் மோட்டார் மூலம் பாசனம் செய்து பயிரை காப்பாற்றினர். அவ்வப்போது பெய்த சிறு மழையால் பயிர்கள் வளர்ந்தன.
இடையே திடீர் திடீரென மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக இருந்த நேரத்தில் பயிர்களில் நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய ஆலோசனை வழங்கி, அதை நடைமுறைப்படுத்தி பயிர்களை காப்பாற்றினர்.
இடையே அக்டோபரில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவ மழை நவம்பர் இறுதியில் பெய்தது. அதன்பின் மழை நின்று விட, டிசம்பர் இறுதியில் மீண்டும் பெய்ய, அதன்பின் அறுவடை நெருங்கும் நேரத்தில் ஜன. 7-ம் தேதி மழை அடித்து பெய்தது. சிதம்பரம் வட்டாரத்தில் அதிகபட்சமாக 22 செ.மீ மழை பதிவானது.
இந்த மழையால் காட்டு மன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மொத்தமாக மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பாதிப்படைந்துள்ளது.
மேலும் சிதம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு பிச்சாவரம், கிள்ளை, பொன்னந்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கடந்த 3 நாட்களில் வெள்ள நீர் வெகுவாக வடிந்தாலும், குமராட்சி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும்? இது குறித்து கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், “பருவம் தவறி மழை பெய்ததால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு வந்து, முழு மானியத்தில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அறுவடை செய்து தர வேண்டும், அறுவடை செய்த விவசாயிகளின் நெல்லை எந்த நிபந்தனையும் இன்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், தமிழக அரசு விவசாயிகளுக்கு முழு இன்சூரன்ஸ் தொகை பெற்று தர வேண்டும்” என்று தெரிவிக்கிறார்.
இது குறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ராமலிங்கம் கூறுகையில், “கடன் வாங்கி, ஆள் பற்றாக்குறையில் விவசாயம் செய்தோம். இந்த திடீர் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பா பயிரில் எங்களுக்கு மகசூல் கிடைக்காது.
அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கினால்தான் விவசாயிகள் ஓரளவுக்கு கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்” என்கிறார். பொங்கலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்து, பாதிப்பு குறித்து அரசிடம் அறிக்கை அளிக்க இருப்பதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT