Last Updated : 12 Jan, 2024 04:57 PM

 

Published : 12 Jan 2024 04:57 PM
Last Updated : 12 Jan 2024 04:57 PM

ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் ஆபத்துதவிகள்: மேட்டுப்பாளையத்தில் செயல்படும் ‘லைஃப் கார்ட்ஸ்’

மாவட்ட காவல் துறையின் ‘லைஃப் கார்ட்ஸ்’ குழுவினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்.

கோவை: கோவை மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் முக்கியமானது பவானியாறு. நீலகிரி மாவட்டத்தில், அப்பர் பவானி என்ற இடத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆறு, கேரளா மாநிலத்தின் வனப்பகுதிகள் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்குள் நுழைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகையை கடந்து 19 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் கலக்கிறது. இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் இருந்து, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது, மழைக்காலத்தில் உபரி நீரும் பவானியாற்றில் திறந்து விடப்படுகிறது.

பவானியாற்றின் நீரோட்டத்தை மேலோட்டமாக பார்க்கும் போது, தண்ணீரின் வேகம் சீராக இருப்பதை போலவும், மெதுவாக செல்வது போலவும் இருக்கும். ஆனால், ஆற்றுக்குள் இறங்கினால், நமது கால்களை நீரோட்டம் இழுத்து கீழே தள்ளிவிடும் அளவுக்கு அதன் வேகம் இருக்கும். சற்று தடுமாறினாலும் நீரில் அடித்துச் செல்லப்படும் சூழல் உள்ளது. இதை உணராமல் சிலர் குளிக்கச் சென்று, அஜாக்கிரதையுடன் இருந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர்.

பரந்து, விரிந்து செல்லும் பவானியாற்றில் தேக்கம்பட்டி, வன பத்ரகாளியம்மன் கோயில், நெல்லித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பொழுதுபோக்குக்காக மக்கள் வருவர். இந்தப் பகுதிகளில் ஆற்றின் நடுவே திட்டுகளும் உள்ளன. ஆற்றின் நீரோட்டம் குறைவாக இருக்கும் சமயங்களில், கரையில் இருந்து மக்கள் ஆர்வத்தால் இடுப்பளவு தண்ணீரை கடந்து, நடுப்பகுதியில் உள்ள மண்திட்டுக்கு செல்வர்.

அந்த சமயத்தில் திடீரென அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகரிக்கும். அப்போது நடுப்பகுதிக்கு செல்பவர்கள் மீண்டும் கரைக்கு திரும்ப முடியாது. தீயணைப்புத்துறையினர், போலீஸார் அவர்களை மீட்க வேண்டிய நிலை உள்ளது.

பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும். இதன் அர்த்தம் உள்ளூர் மக்களுக்கு தெரியும். ஆனால், பொழுதுபோக்குக்காக வரும் வெளியூர் மக்களுக்கு தெரியாது. அவர்கள் நீரில் சிக்கிக் கொள்கின்றனர்.

பவானியாற்றில் குளிப்பதற்கும், பொழுது போக்கவும் சென்று, கவனக்குறைவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 பேர் பவானியாற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 3 பெண்கள் உட்பட 5 பேர் பவானியாற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, பவானியாற்றுப் பகுதியில் உயிரிழப்புகளைத் தடுக்க கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில், ‘லைஃப் கார்ட்ஸ்’ என்ற பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது. உதவி ஆய்வாளர் ராஜன் தலைமையில் 9 காவலர்கள் இப்பிரிவில்பணியாற்றுகின்றனர். இவர்கள் மேட்டுப்பாளையம், சிறுமுகை காவல் எல்லைக்குட்பட்ட பவானியாற்றுப் பகுதிகளில் தொடர்ச்சியாக ரோந்து பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வும், நீர் நிலைகளில் சிக்குபவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, உதவி ஆய்வாளர் ராஜன் கூறும்போது, ‘‘பவானியாற்றின் நீரோட்டத்தை பற்றி அறியாமல், பொழுதுபோக்குவதற்காக வரும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடிகள் உள்ளிட்டோர் ஆற்றில் சிக்கி உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதைத் தடுக்க நாங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறோம். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து எங்களுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் உடனடியாக ஆற்றின் கரைப்பகுதிகளில் உள்ளவர்களை எச்சரிக்கிறோம். நடுப்பகுதியில் உள்ளவர்களை கரைக்கு வரவழைத்து விடுகிறோம்.

பத்ரகாளியம்மன் கோயில் அருகே விளாமரத்தூர் என்ற இடத்தில் தொடங்கி கல்லாறு தூரிப்பாலம் வரை, கிட்டத்தட்ட 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று கண்காணிக்கிறோம். ஆற்றங்கரையோரம் விளாமரத்தூர், குண்டுக்கல்துறை, நெல்லித்துறை, பத்ரகாளியம்மன் பாலம்,சிறுமுகையில் ஆலாங்கொம்பு, ராமர்கோயில், ஊமப்பாளையம், வச்சினாம்பாளையம், கல்லாறு உள்ளிட்ட 19 இடங்களில் ‘பாய்ன்ட்’ அமைத்து பிரத்யேகமாக கண்காணித்தும், ரோந்துப் பணியில் ஈடுபட்டும் வருகிறோம்.

சுழற்சியாக தினமும் 80 கிலோ மீட்டர் ரோந்து செல்கிறோம். இந்த இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம். நாங்கள் வந்த பிறகு நீரில் மூழ்கி உயிருக்கு போராடியவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் என 11 பேரை மீட்டுள்ளோம். ஆற்றின் நடுப்பகுதி திட்டு உள்ளிட்ட இடங்களில் சிக்கிய 650 பேரை மீட்டுள்ளோம்’’ என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறும்போது,‘‘கடந்த 2023-ம் ஆண்டு நடந்த உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பவானியாற்றை மையப்படுத்தி ‘லைஃப் கார்ட்ஸ்’ திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு பிரத்யேக உடைகள், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளன. அவை விரைவில் வழங்கப்படும். இக்குழுவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. பவானியாற்றுப் பகுதியில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என 19 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு உள்ளூர் மக்களுடன் இணைந்து சிறந்த முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x