Published : 12 Jan 2024 12:54 PM
Last Updated : 12 Jan 2024 12:54 PM
புதுச்சேரி: ‘துணை முதல்வராக போகிறாராமே உதயநிதி?’ என்ற கேள்விக்கு கைக்கூப்பி பதில் தராமல் புறப்பட்டுச் சென்றார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாட்டம் இன்று காலை நடந்தது. ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை புது பானையில் பால் மற்றும் அரிசி இட்டு பொங்கல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பொங்கல் விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை வளாகமே தோரணங்கள் மற்றும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
தொடர்ந்து கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் கரகாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ராஜ் நிவாஸில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள். பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
மற்றவர்களை ஆளுநர் பேச கூறியபோது அவர்கள் ஆளுநரை பேசக்கூறினர். அதையடுத்து ஆளுநர் தமிழிசை, “நான் பேசுவதைக் கேட்டால் சந்தோசம். புதுச்சேரி வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபடுவோம். அனைத்தும் செய்கிறோம். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். புதுச்சேரியை முன்னேற்றுவதில் வளர்ச்சி பொங்கலாக இருக்கும்." என்று குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், “பொங்கல் நல்ல வாழ்க்கையை மகிழ்ச்சி, ஆரோக்கியத்தைத் தர வேண்டுகிறேன். கரோனா காலங்களில் இதுபோல் கொண்டாட முடியவில்லை. எந்த நிகழ்வாக இருந்தாலும் ஓரிரு கிராமிய கலை நிகழ்வுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். அது கிராமிய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் திருமணங்களிலும் அவர்களை அழைத்து நிகழ்ச்சியை நடத்தலாம். காதுக்கு கேட்காத சப்தத்தில் நிகழ்வை நடத்துவதை விட கிராமிய கலை நிகழ்வுகளை நடத்தலாம். மக்கள் வள்ர்ச்சி பாதை நோக்கி செல்ல வாழ்த்துக்கள். புதுச்சேரி அனைத்து விதத்திலும் வளர்ந்து வருகிறது. முழு பட்ஜெட் தாக்கல், அரசு பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவத்தில் 10 சத உள்ஒதுக்கீடு தந்துள்ளோம். கைத்தறி தரவில்லை- பாலியஸ்டர் தந்துவிட்டதாக பக்கத்து மாநிலங்களில் மக்கள் சொல்கிறார்கள். அதனால்தான் பயனாளிகள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துகிறோம். மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்வார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உலகளவில் உள்ளது. காய்கறி விற்போர், மீன் விற்போர் என எளிய மக்களிடத்திலும் டிஜிட்டல் இந்தியா சென்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.
‘அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக போகிறாரே?’ என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இரு கைகளையும் கூப்பி வணக்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT