Last Updated : 12 Jan, 2024 11:30 AM

1  

Published : 12 Jan 2024 11:30 AM
Last Updated : 12 Jan 2024 11:30 AM

நெல்லை மேயர் விவகாரம் | ஒரு கவுன்சிலர்கூட வரவில்லை: நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - மாநகராட்சி ஆணையர்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலத்தில் பிரதான வாயில்முன் அமர்ந்து கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் (கோப்பு படம்)

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதுவரை ஒரு கவுன்சிலர்கூட மாநகராட்சிக்கு வரவில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மாமன்ற கூட்டத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நெல்லை மாநகர ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் மாமன்ற கூட்ட அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மாமன்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாக்கரே சுபம் ஞான தேவராவ் தெரிவித்துச் சென்றார்.

அதன்படி, 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர்கூட மாநகராட்சிக்கு வரவில்லை. அரைமணி நேரம் ஆகியும் எந்த ஒரு கவுன்சிலர் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. இதனை ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். போதிய ‘கோரம்’ (உறுப்பினர்கள் பலம்) இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது என்றார். மேலும், மாமன்ற விதிப்படி அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்று கூறினார்.

பின்னணி: நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் தாக்கரே அறிவித்துள்ளனர். இதற்கிடையில், திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஈடுபட்டார்.

‘தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். வாக்கெடுப்பில் யாரும்கலந்துகொள்ளக் கூடாது’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் சமரசத்தை திமுக கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், "அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விருதுநகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே,கூடுதல் உடைகளை எடுத்துக்கொண்டு அப்துல்வகாப் எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு வாருங்கள்" என திமுக கவுன்சிலர்கள் 20 பேருக்கு தொலைபேசியில் நேற்று அழைப்புகள் வந்தன.

இதையடுத்து, மண்டலத் தலைவர்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூர்), இக்லாம்பாசிலா (மேலப்பாளையம்) மற்றும் கவுன்சிலர்கள் சிலர்நேற்று காலை எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தனித்தனி அணிகளால் குழப்பம்: அதேநேரத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தனியாக விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றது குழப்பத்தை ஏற்படுத்தியது. கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்பேரில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆலோசிக்க விருதுநகருக்குஇவர்கள் சென்றதாகத் தெரிகிறது.

விருதுநகருக்கு இரு பிரிவாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் இன்று மாலை வரை அங்கேயே தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்களை பங்கேற்க விடாமல் செய்யும் வகையில், அவர்கள் சுற்றுலாவுக்குஅழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்’ என்று சமூகவலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x