Published : 12 Jan 2024 05:15 AM
Last Updated : 12 Jan 2024 05:15 AM
சென்னை: எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதுவரை 2.20 லட்சம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது, மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது. கடலில் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் பரவியதால், மீன்கள் செத்து மிதந்தன. கருப்பு நிறத்தில் தார் போன்ற கழிவு படிந்ததால், மீன்படி படகுகள், வலைகள் பாழாகின. குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்ததால், மீனவர்கள், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வுதாமாக முன்வந்து வழக்காக எடுத்தது. எண்ணெய் கசிவு குறித்து ஆய்வுசெய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலை குழுவும் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தீர்ப்பாய அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர்கே.சத்யகோபால் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய நிலவரம் குறித்துமாசு கட்டுப்பாட்டு வாரியம், சிபிசிஎல்சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
மாசு கட்டுப்பாட்டு வாரியம்: சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகளைஅகற்றும் பணி பெரும்பாலான இடங்களில் முடிவடைந்தது. சதுப்புநில தாவரங்கள் உள்ள பகுதியில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 240 லிட்டர் அளவுக்கு நீர் கலந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு, சிபிசிஎல் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மண், குப்பையுடன் 660 டன்எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை உயிரி முறையில் அழிக்க கோவாவில் உள்ள தேசியகடல்சார் நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிபிசிஎல் அறிக்கை: கடந்த டிசம்பர் 4-ம் தேதி மணலி பகுதியில் பெய்த கனமழையால் சிபிசிஎல் பகுதியில் நீரின் அளவு உயர்ந்தது. ஆனாலும், அதன் தாக்கத்தால் ஆலையில் எந்த விதிமீறலும், அலட்சிய செயலும்நடக்கவில்லை. அந்த காலகட்டத்தில் சிபிசிஎல் ஆலையில் குழாய் கசிவோ, தொட்டி கசிவோ, உபகரணங்கள் செயல்பாட்டில் குறைபாடோ ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் மீதானஅக்கறை, பொறுப்புணர்வு அடிப்படையில், இக்கட்டான சூழலில் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளில் சிபிசிஎல் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஐஐடி மற்றும் இதர துறைகளின் அறிக்கைகள் கிடைத்த பிறகு, உரியஉத்தரவு பிறப்பிக்கப்படும் என்றுஉத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT