Published : 11 Jan 2024 09:03 PM
Last Updated : 11 Jan 2024 09:03 PM

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 12,176 காளைகள், 4,514 வீரர்கள் முன்பதிவு

கோப்புப்படம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க கடந்த ஆண்டைவிட அதிகளவு காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து 12,176 காகைளும், 4,514 வீரர்களும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

பொங்கல் விழா என்றாலே மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்கும். தமிழர்களுடைய வீரத்தையும், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தையும் இந்த விளையாட்டு பறைசாற்றும் என்பதால் இந்தப் போட்டியை தென் தமிழகத்தில் விமரிசையாக நடத்துவார்கள். இதில், மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வரும் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்தப்படும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை.

இந்தப் போட்டிகளை காண தமிழகத்தில் இருந்து மட்டுமில்லாது வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் மதுரையில் திரள்வார்கள். சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதால் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்ற மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளை காட்டிலும் கூடுதல் கவனம் பெறும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு, வேஷ்டி உள்ளிட்ட 5 வகை நிச்சயப்பரிசுகள் வழங்கப்படும்.

ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். அதனால், இந்த ஜல்லிக்கட்டுகளின் வாடிவாசல்களில் தங்கள் காளைகளை அவிழ்க்க காளை வளர்ப்போர் போட்டிப்போடுவார். மாடுபிடி வீரர்களும் முன்தயாரிப்பு பயிற்சி மேற்கொண்டு இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

ஆனாலும், ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தப்பட்சம் 750 முதல் 850 காளைகள் வரையே அவிழ்த்துவிட முடியும். அதுவும் சரியான நேரத்துக்கு, திட்டமிடுதலுடன் போட்டிகள் நடத்தப்பட்டால் மட்டுமே இத்தனை காளைகளை அவிழ்த்துவிட முடியும். இல்லாவிட்டால் 600 காளைகளுடன் போட்டி முடிந்துவிடும். அதனால், போட்டிகளில் பங்கேற்கும் டோக்கன் பெறுவது மட்டுமில்லாது முன்வரிசையில் டோக்கன் பெறுவதற்கு காளை உரிமையாளர்கள், பலவழிகளில் முயற்சி செய்வார்கள். அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பல சிபாரிசுகளுடன் செல்வாக்குப்படைத்தவர்களின் உதவியுடன் டோக்கன் பெறுவார்கள்.

அதுபோல் மாடுபிடி வீரர்களும் அதிகப்பட்சம் 500 வீரர்களே களம் இறக்க வாய்ப்பள்ளது. அவர்களுக்குமே சில முறை சிபாரிசு அடிப்படையில் டோக்கன் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், இந்த முறை பாராபட்சமில்லாமல் நியாயமான முறையில் காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகமும் உள்ளூர் அமைச்சர் பி.மூர்த்தியும் தெரிவித்துள்ளதால் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை அதிக காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2,400 காளைகளும், 1318 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல், 16-ம் தேதி நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3,677 காளைகளும், 1,412 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். 17-ம் தேதி நடக்கும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 6,099 காளைகளும், 1784 வீரர்ளும் முன்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து 12,176 காகைளும், 4,514 வீரர்களும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 9, 701 காளைகளும், 5,399 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு, காளைகளை அடக்கும் வீரர்கள் எண்ணிக்கை முன்பதிவு குறைந்தாலும் 2,475 காளைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு போட்டியில் பங்கேற்க அதிகப்பட்சம் 1,000 காளைகளுக்கே டோக்கன் கொடுக்க வாய்ப்புள்ளதால் மற்றவர்களுக்கு டோக்கன் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் காளை வளர்ப்போர் பலர் போட்டியில் பங்கேற்க ஏமாற்றம் அடைந்தாலும், தொடர்ந்து காளைகளுக்கு பயிற்சி கொடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று விடுவார்கள். அதோடு அப்படி பங்கேற்ற காளைகள் கார், பைக் போன்ற விலை உயர்ந்த பரிசுகளையும் பெற்றள்ளன.

6 கார்கள் பரிசு: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறந்த காளைகளுக்கு தலா ஒரு கார், சிறந்த வீரர்களுக்கு தலா ஒரு கார் என மொத்தம் 6 கார்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின் அமைச்சர் பி.மூர்த்தி கூறியது:

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ஜனவரி 15-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 16-ல் பாலமேடு ஜல்லிக்கட்டு, 17-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு நிறைவு பெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, சரியான ஆவணங்கள் இல்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தேர்வாகும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். மூன்று ஜல்லிக்கட்டிலும் 6 கார்கள் வழங்கப்பட உள்ளன” என்று அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய அரங்கில் 5 நாட்கள் போட்டி: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இம்மாத இறுதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்துவைக்க உள்ளார். தொடக்க விழா நடைபெறும் நாள் முதல் தொடர்ந்து 5 நாட்கள் இந்த பிரம்மாண்ட அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அரசு சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒரு நாளாவது மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். இதுபோல் ஆண்டுதோறும் இந்த அரங்கில் போட்டி நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x