Published : 11 Jan 2024 11:12 AM
Last Updated : 11 Jan 2024 11:12 AM
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாடுபிடி வீரர்கள், காளைகள் ஆன்லைன் முன்பதிவு தீவிரமாக நடக்கிறது. கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த ஆண்டாவது காளைகளின் உரிமை யாளர்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி டோக்கன் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், காளைகளின் உரிமையாளர்கள் பலர் தங்கள் காளைகளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறக்குவதை கவுரவமாக கருது கின்றனர். இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி, பாலமேட்டில் 16-ம் தேதி, அலங்காநல்லூரில் 17-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பதிவு செய்த காளைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஒரு காளை ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பலர் முறைப்படி பதிவு செய்து அனுமதி டோக்கன் பெற காத்திருக்கின்றனர்.
கடந்த காலங்களில் விஜபிகள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், ஜல்லிக்கட்டு அமைப்பினரின் காளைகள் அல்லது அவர்கள் பரிந்துரை செய்வோரின் காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்குவதில் முன்னுரிமை தரப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த ஆண்டு அதேபோன்ற நிலை ஏற்படக்கூடாது. பாரபட்சமின்றி அனுமதி டோக்கன் வழங்க மதுரை மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காளைகளின் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: இந்த ஆண்டு வெளிப்படைத் தன்மையுடன் அனுமதி டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதே கருத்தைத்தான் அவர் கடந்த ஆண்டும் தெரிவித்தார். ஆனால், அப்போதும் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. சாதாரண மனிதர்கள் வளர்க்கும் காளைகளுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன் கிடைப்பது சிரமமாக உள்ளது.
அதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பரிந்துரையைப் பெற்று போட்டிகளில் பங்கேற்பதற்கான டோக்கனை பெற வேண்டிய நிலை உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் கூட மிகவும் சிரமப்பட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். அவர்களின் காளைகளுக்கு போதிய தகுதியிருந்தும் இந்த 3 ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைப்பதில்லை.
பரிசுகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், ஜல்லிக்கட்டுக் காளைகளை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தாமல் ஆண்டு முழுவதும் போட்டிக்கு தயார்படுத்தி வருகிறோம். எங்கள் காளைகள் வெற்றிபெற்றால் மேளதாளத்துடன் ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று விழா எடுப்போம். எங்கள் காளைகளுக்கு பாரபட்சமில்லாமல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT