Published : 11 Jan 2024 04:48 AM
Last Updated : 11 Jan 2024 04:48 AM
சென்னை: தமிழகத்தில் 2.20 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நேற்று தொடங்கியது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை டியூசிஎஸ் நியாய விலைக் கடையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்து வழங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து வழங்கினர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரேநேரத்தில் வருவதை தவிர்க்க, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வரும் 13-ம் தேதி மாலை வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. விடுபட்டவர்களுக்கு 14-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்” என்ற குறளில் திருவள்ளுவர், உழவுத் தொழிலே சிறந்தது என்றும், உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது எனவும் புகழ்ந்து, உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என 2,19,71,113 குடும்பங்களுக்கு ரூ.2,436.19 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 லட்சம் வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சம் சேலைகளை வழங்க தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT