Published : 11 Jan 2024 04:41 AM
Last Updated : 11 Jan 2024 04:41 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19 வரை தள்ளிவைக்க அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவுக்கு இடையிலான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வேலைநிறுத்தத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கிதியோன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், பி.ஆர்.ராமன் மற்றும் வழக்கறிஞர்கள் பாலன் ஹரிதாஸ், சி.கனகராஜ், ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தமிழக அரசு பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. இந்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஜன.19-ல் தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்.6-ல் விசாரணைக்கு வரவுள்ளது. நேற்று அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் இன்று அதிகாரிகளை வேலைக்கு செல்லவிடாமல் மிரட்டுகின்றனர். எனவே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
தொழிற்சங்கங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, ‘‘இந்த வேலைநிறுத்தம் முறையாக அறிவிப்பு கொடுத்த பிறகே நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற 92 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 2014 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். 6 அம்ச கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கிறது. ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வையாவது வழங்க வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட ஏற்கவில்லை" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜன.19 வரை இந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும். அதேபோல தமிழக அரசும் தற்காலிகமாக 92 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்தை தற்போது வழங்கிவிட்டு பின்னர் கழித்துக்கொள்ளட்டும் என்றார்.
ஆனால் அதற்கு இருதரப்பும் ஒப்புக் கொள்ளவில்லை. அதையடுத்து இருதரப்பும் இப்படி பிடிவாதம் காட்டினால் எப்படி என தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் நலன் கருதி ஜன.19 வரை போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று (ஜன.11) முதல் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT