Published : 10 Jan 2024 06:45 PM
Last Updated : 10 Jan 2024 06:45 PM
திருநெல்வேலி: கன்னியாகுமரிக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதால் கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முடிவால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கூடங்குளம் அணு உலை திட்டம் இடநெருக்கடியால் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த அணு உலை வளாகம் 5.40 கி.மீ. நீளம், 2.5 கி.மீ. அகலம் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் 6 அணு உலைகள், அணுக்கழிவு மையங்கள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை, உப்பகற்றி ஆலைகள், நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் அடர்த்தியாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 1-2 அணு உலைகளுக்கும் 3-4 அணு உலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. இதுபோல் 3-4 அணுஉலைகளுக்கும், 5-6 அணுஉலைகளுக்கும் இடையே அதைவிட குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது.
இச்சூழலில் 6 அணு உலைகளுக்குமான அணுக்கழிவு மையங்களை அதே வளாகத்தில் கட்டவுள்ளார்கள். இதற்காக கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை போன்ற ஊர்களை காலி செய்யவுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது இங்கு செயல்படும் அணு உலைகள் பலமுறை பழுதுபட்டுள்ளன. அண்மையில் எண்ணூர் பகுதிில் உரத்தொழிற்சாலையில் நடந்த அமோனியா விஷவாயு கசிவை தடுக்கவோ, அதை திறம்பட எதிர்கொள்ளவோ முடியாத அரசுகள், கூடங்குளத்திலோ அல்லது கல்பாக்கத்திலோ கதிர்வீச்சு பேரிடர் ஏற்பட்டால் மக்களை எப்படி பாதுகாப்பார்கள் என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ரஷ்யாவுடன் 3 ஒப்பந்தங்களில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதிர்காலத்தில் கூடுதல் அணுஅலகுகள் அமைப்பது தொடர்பான சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி இந்தியா முழுவதும் 28 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் நான்கு வட்டாரங்கள் கன்னியாகுமரிக்கு தெற்கு கடல் பகுதியில் 32,485 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைய உள்ளது. இந்தக் கனிம சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் தமிழக கடலோரமும் கடல் வளமும் மற்றும் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அண்மையில் திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் ரூ.400 கோடி ரூபாய் மதிப்பில் மாதிரி அதிவேக ஈனுலை எரிசக்தி சுழற்சி மையம் ஒன்றை திறந்து வைத்தார். இது குறித்த எந்த விவரங்களும் மக்களிடம் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.
கூடங்குளத்தில் மேலும் சில அணு உலைகளை கட்டப் போவதாக வெளியான தகவல்களால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள். தமிழக மக்களிடம் கலந்தாலோசிக்காமல் கடல் கனிம சுரங்கங்கள் திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். விரைவில் இந்தத் திட்டத்தை எதிர்த்து மக்களை திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களின் ஒப்புதலுடன் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT