Published : 10 Jan 2024 04:17 PM
Last Updated : 10 Jan 2024 04:17 PM
சென்னை: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்துவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19-ம் தேதி வரை நிறுத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த டி.ஃபார்ம் படிக்கும் மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நிலுவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்து, போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "தமிழக அரசு பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரை, 7,000 போக்குவரத்து தொழிலாளர்களா? இல்லை பொதுமக்களா? என்ற நிலை நீடித்து வருகிறது.
எனவே, போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும். ஏற்கெனவே நிர்ணயித்தப்படி, வரும் 19-ம் தேதி அரசு தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த அகவிலைப்படி தொடர்பாக விவாதிக்கப்படும். மேலும், அகவிலைப்படி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்காமல், தொழிற்சங்கத்தின் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அதிகாரிகளை தங்களது பணிகளை மேற்கொள்ள விடாமல், இடையூறு ஏற்படுத்தி அவர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்" என்று வாதிட்டார்.
அப்போது போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "அரசு தரப்பில், கடந்த 2014-ம் ஆண்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, இந்த ஜனவரி மாதத்துக்குள் அந்த தொகையை டெபாசிட்ட செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. ஏற்கெனவே அரசும் 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே, பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?” என்று தொழிற்சங்கங்களுக்கு கேள்வி எழுப்பினார்.
அதேபோல், “92,000 ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். தற்காலிகமாக அவர்களுக்கு ரூ.2,000 வழங்கிவிட்டு, பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மீதித் தொகையை டெபாசிட் செய்ய முடியுமா?” என்று அரசு தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால், தொழிற்சங்கமும், அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அப்போது தொழிற்சங்கங்கள் தரப்பில், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. வரும் ஜன.19-ம் தேதி வரை தங்களது போராட்டத்தை நிறுத்திவைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு, நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்குத் திரும்ப அனுமதியளித்த நீதிபதிகள், பணிக்குத் திரும்பும் பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், பணிக்குத் திரும்பும் பணியாளர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT