Published : 10 Jan 2024 02:51 PM
Last Updated : 10 Jan 2024 02:51 PM

“எங்கும் மகிழ்ச்சி...” - ரூ.1,000 உடன் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பங்களுக்கு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் தமிழக அரசால் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன. 2,19,71,113 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சம் இலவச வேட்டிகள், 1 கோடியே 77 இலட்சம் இலவச சேலைகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். திட்டத்தை தொடங்கி வைத்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன். சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x