Published : 10 Jan 2024 05:49 AM
Last Updated : 10 Jan 2024 05:49 AM
சென்னை: தென்மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதாகவும், முதலீடுகளுக்கான இலக்கை மேலும் அதிகரிக்க உழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தின் 34 சதவீத உற்பத்தி திறன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன. அதேநேரம் சில மாவட்டங்களில் உற்பத்தி திறன் 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தென் தமிழகத்தில் அதிகமான மாவட்டங்கள் வளர்ச்சி இல்லாமல், வேலைவாய்ப்பின்றி உள்ளன.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, இந்தியாவை பல்வேறு நாடுகள் முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக பார்த்து வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எங்களுடைய எதிர்பார்ப்பாக ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதேநேரம், ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.33.51 லட்சம் கோடி முதலீட்டை அந்த மாநிலம் ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வறட்சியான பகுதியாகக் கருதப்படும் புருவஞ்சல் நகரில் மட்டும் ரூ.9.51 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல கர்நாடக மாநிலத்தில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் 9.82 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. தற்போது குஜராத் மாநிலத்தில் ஜன.10, 11, 12 ஆகிய நாட்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களில் மட்டும் குஜராத் மாநிலம் ஈர்த்த முதலீடுகள் மட்டுமே ரூ.7 லட்சம் கோடியாகும்.
தமிழக அரசுக்கு பாராட்டு: இவையெல்லாம், தமிழக அரசு எவ்வாறு இலக்குகளை பெரிதுபடுத்தி உழைக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். நமக்கு முதலீடாக வருகிற ஒவ்வொரு ரூபாயும் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இந்த மாநாட்டில் ஈர்த்த முதலீடுகளை நான் விமர்சிக்கவில்லை. இதில் அரசியல் நோக்கமும் இல்லை. ஆனால், நாம் இன்னும் பல தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, அடுத்து நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூடுதலாக முதலீடுகளை தமிழக அரசு ஈர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT