Published : 09 Jan 2024 08:57 PM
Last Updated : 09 Jan 2024 08:57 PM

செண்பகத்தோப்பு கோயிலுக்கு செல்வோரிடம் கட்டணம் வசூலிக்க வட்டாட்சியர் தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு செல்லும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் விரிவான உத்தரவு பிறப்பிக்கும் வரை இரு தரப்பும் கட்டணம் வசூலிக்க கூடாது என வட்டாட்சியர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான 350 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன. செண்பகத்தோப்பு பகுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான தென் திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் காட்டழகர் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், ராக்கச்சி அம்மன் கோயில் மற்றும் மீன்வெட்டிப்பாறை அருவி ஆகியவை உள்ளது.

அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்படி ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு செண்பகத்தோப்பு வரும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2024 ஜூன் 30ம் தேதி வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ரூ.3.80 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

மீன்வெட்டிப்பாறை அருவி

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு குழு சார்பில் சோதனை சாவடி அமைத்து செண்பகதோப்பு பகுதிக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் ஆகியோரிடம் நபர் 1க்கு ரூ.20 வீதம் சூழல் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டணம் செலுத்துவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விவசயிகளிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையைக் கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மேம்பாட்டு குழு கூட்டத்தில், செண்பகதோப்புக்கு வரும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணத்தை வனத்துறை வசூலித்து, கோயில் நிர்வாகத்துக்கு 60 சதவீதம் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை செண்பகதோப்பு வரும் பக்தர்களிடம் கோயிலில் ஏலம் எடுத்தவர் கட்டணம் வசூலிக்க வனத்துறை எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இரு துறைகள் சார்பில் செண்பகத்தோப்பு வரும் பக்தர்களிடம் எந்த கட்டணம் வசூலிக்க கூடாது என வட்டாட்சியர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

சமாதான கூட்டத்தில் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக உதவியாளர் சுடலைமணி, மம்சாபுரம் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x