Published : 09 Jan 2024 07:48 PM
Last Updated : 09 Jan 2024 07:48 PM
கோவை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் சூழலில், கோவையில் இன்று அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பிற்பகலுக்குப் பின்னர் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 40 பேருந்துகள் இயக்கப்பட்டன.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவிக்கப்பட்படி, போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.
கோவையில் உப்பிலிபாளையம், மருதமலை, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், கருமத்தம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், சுங்கம், உக்கடம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் மொத்தம் 17 பணிமனைகள் (டெப்போக்கள்) உள்ளன. இவற்றின் மூலம் 602 நகரப் பேருந்துகள், 349 வெளியூர் பேருந்துகள் என மொத்தம் 951 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை முதல் வழக்கம் போல் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன.
இன்று காலை நிலவரப்படி 101.23 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியதால், பொதுமக்கள் சிரமமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர். சூலூர் உள்ளிட்ட சில பணிமனைகளில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், மாற்றுப் பேருந்துகளாக வைக்கப்பட்டிருந்த பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஓட்டுநர்கள் வராத பேருந்துகளுக்கு மாற்று ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் இயக்கப்பட்டன. சுங்கம் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி பணிமனைகள் முன்பும் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். முக்கிய சாலைகளில் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது,‘‘கோவையில் இன்று வழக்கம் போல் நகர மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. 80 சதவீத தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தனர். பிற்பகலுக்கு பின்னர் 40 தற்காலிக ஓட்டுநர்கள், 25 தற்காலிக நடத்துநர்களை பயன்படுத்தி 40 பேருந்துகள் இயக்கப்பட்டன,’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT