Published : 09 Jan 2024 06:17 PM
Last Updated : 09 Jan 2024 06:17 PM

தமிழகம் முழுவதும் 95.6% பேருந்துகள் இயக்கம்: அரசு தகவல் @ வேலைநிறுத்த தாக்கம்

இடம்: அம்பத்தூர் டன்லப் பேருந்து நிறுத்தம் | படம்: எம்.வேதன்

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், ‘தமிழகம் முழுவதும் இயக்கப்பட வேண்டிய 17,302 பேருந்துகளில் 16,547 பேருந்துகள், அதாவது 95.6% பேருந்துள் இயக்கப்பட்டுள்ளன’ என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பேருந்துகள் இயக்கம் தொடர்பாக கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நேரடியாக ஆய்வு செய்தேன். மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் பயண விவரம் குறித்து கேட்டறிந்தேன்.

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்பட வேண்டிய 3,233 பேருந்துகளில் 3,072 பேருந்துகள், அதாவது 95.02% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்பட வேண்டிய 303 பேருந்துகளில் 303 பேருந்துகள், அதாவது 100% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இதேபோல், விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 2,828 பேருந்துகளில் 2,580 பேருந்துகளும், சேலத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 1,556 பேருந்துகளில் 1,547 பேருந்துகளும், கோவையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 2,461 பேருந்துகளில் 2,311 பேருந்துகளும், கும்பகோணத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 3,095 பேருந்துகளில் 2,957 பேருந்துகளும், மதுரையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 2,166 பேருந்துகளில் 2,132 பேருந்துகளும், திருநெல்வேலியில் இருந்து இயக்கப்பட வேண்டிய 1,660 பேருந்துகளில் 1,645 பேருந்துகளும் என மொத்தமாக இயக்கப்பட வேண்டிய 17,302 பேருந்துகளில் 16,547 பேருந்துகள், அதாவது 95.6% பேருந்துள் இயக்கப்பட்டுள்ளன.

எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளான 6 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று (ஜன.9) காலை போராட்டம் தொடங்கியது. இதனால், ஓரளவு மட்டுமே பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x