Published : 09 Jan 2024 05:26 PM
Last Updated : 09 Jan 2024 05:26 PM

மதுரை - கீழக்கரையில் பிரமாண்ட புதிய ஜல்லிக்கட்டு அரங்கு திறக்கப்படுவது எப்போது?

மதுரை: மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் 66 ஏக்கரிலான புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இம்மாத இறுதிக்குள் திறந்து வைத்து போட்டியைத் தொடங்கிவைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை. இந்தப் போட்டியை காண மக்கள் திரண்டு வந்தாலும் போதிய இருக்கை வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காண முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள். அதனால், நிரந்தரமாக போதிய கேலரி வசதிகள், அடிப்படை வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் போல் சர்வதேச தரத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் சர்வதேச தரத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கு கட்டப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மட்டுமில்லாது அனைத்து வகை தமிழ் பாரம்பிரய விளையாட்டுபோட்டிகள், நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது. அதில் கிடைக்கும் வருவாயில் இந்த விளையாட்டு அரங்கை பராமரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

புதிய அரங்குக்கு எதிர்ப்பு: ஆரம்பத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மாற்றாகவே இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அதனால், இந்த அரங்கம் கட்டுவதற்கு கட்டும் போதே அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு கிராமங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டு பாரம்பரியமாக அலங்காநல்லூர் வாடிவாசலிலே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும், எந்த காரணம் கொண்டு இங்கிருந்து கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கிற்கு போட்டி மாற்றப்படாது என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அதன்பின், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தபிறகு, இந்த அரங்கில் போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த புதிய அரங்கின் கட்டுமானம் 100 சதவீதம் நிறைவுபெற்று திறப்பு விழாவுக்கு தயராக உள்ளது. அதனால், இந்த மாதம் இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கை திறந்து வைக்க உள்ளார். அதோடு அன்று இந்த புதிய அரங்கில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்

அரங்கை பார்வையிட்ட அமைச்சர்கள்: அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும், பராம்பரியமான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த பிறகு இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு புதிய இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா மற்றும் அதனுடன் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளும் மும்முரமாக நடக்கிறது. இந்தப் போட்டியும், மற்ற போட்டிகளை அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று இந்த அரங்கை பார்வையிட்டனர்.

அமைச்சர் எ.வ.வேலு தகவல்: பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியது: ''தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்து வந்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டின் பாரம்பாரிய விளையாட்டாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கிறது. இதனை கருத்திற்கொண்டு முதல்வர் மதுரை மாவட்டத்தை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கென்று மதுரை மாவட்டத்தில் நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கம் 77,683 சதுரஅடி பரப்பளவில், ரூபாய் 61.38 கோடி மதிப்பீட்டில் 3 அடுக்கு கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 4,500 ஆயிரம் நபர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் வரலாறு மற்றும் பரிணாமம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காளைகளுக்கான காத்திருப்புக் கூடம், மாடுபிடி வீரர்களுக்கான அறை, கால்நடை மருத்துவர்கள் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான அறை, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்னணு திரை என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுமானப் பணிகள் தொடங்கி 10 மாத காலத்திற்குள் மிக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டு 100 சதவிகிதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவிலேயே முதன்முதலாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கென நிரந்தர விளையாட்டு அரங்கம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழா அன்று இந்த அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

மேலும், இந்த அரங்குக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திடும் நோக்கில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக 21.40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூபாய் 28.50 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமைதாரர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திர மோகன், சுற்றுலா மற்றும் இந்து, சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் அவர்கள் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x