Published : 09 Jan 2024 04:59 PM
Last Updated : 09 Jan 2024 04:59 PM
சென்னை: "மெக்கா, மதீனா செல்லும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முள் குத்தினால் கூட உடனடியாக குரல் கொடுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அண்டை மாநிலமான கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தபடுவதை கண்டும், காணாமல் கள்ள மவுனத்தில் இருப்பது காம்ரேட் மாடலும் திராவிட மாடலும் இந்து விரோத செயலில் ஈடுபடுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது" என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சபரிமலை மண்டல பூஜை காலத்தில் கேரள மாநில அரசின் கவனக்குறைவாலும் அசட்டையாலும் ஐயப்ப பக்தர்கள் சொல்ல முடியாத துயரை அடைந்தனர். ஒரு கட்டத்தில் கேரள மாநில உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து தலையிட்டு உத்தரவுகள் பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுகளையும் மாநில அரசு நடைமுறைபடுத்தவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.
இந்நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபட்டு பல மாநில பக்தர்கள் கோடிக்கணக்கில் வருகை தரும் நிலையில் மண்டல பூஜை காலத்தைவிட மிக மோசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசு நடந்துகொள்கிறது. சன்னிதான பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் கேரள மாநில காவல் துறையினர் பக்தர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறார்கள். “ஏன்டா இங்கே வர்றீங்க?” என்று பக்தர்களை கடுமையான சொற்களைப் பேசி நோகடித்திருக்கிறார்கள்.
சபரிமலை புனிதம் கெடுக்க ஆயிரகணக்கான அதிரடிப்படை காவலர்களை சபரிமலையில் குவித்து இறை நம்பிக்கையற்ற பெண்களை சன்னிதானத்துக்கு அனுப்ப முயன்றதில் ஒரு பங்கு கூட ஐயப்ப பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனம் செய்விக்க காம்ரேட் முதல்வர் பினராயி விஜயன் முயற்சிக்கவில்லை என்பதும் காவல்துறையை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள முதல்வர் பக்தர்களை துன்புறுத்த காவல்துறையை பிரயோகபடுத்துவதும் கம்யூனிஸ்ட் அரசின் அப்பட்டமான இந்து விரோத போக்கை எடுத்துகாட்டுகிறது.
பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பது மிகைபடுத்தபட்ட செய்தியாகவே தோன்றுகிறது. வழக்கம் போல மகரவிளக்கு காலத்தில் வருகின்ற அளவு பக்தர்கள்தான் வருகிறார்கள். ஆனால் அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்துக்கு போதிய திட்டமிடல் இல்லாததாலும் நிலக்கல் - பம்பா - நிலக்கல் பகுதிக்கு மிக குறைவான பேருந்து இயக்கபடுவதாலும் பாதுகாப்பு பணியில் போதுமான காவல் துறையினர் ஈடுபடுத்தபடாததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒட்டுமொத்தமாக பயனற்று பக்தர்கள் சொல்லொண்ணாத துயரடைகிறார்கள்.
பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் மெக்கா, மதீனா செல்லும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முள் குத்தினால் கூட உடனடியாக குரல் கொடுக்கும், களமிறங்கும் தமிழக முதல்வர் அண்டை மாநிலமான கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தபடுவதை கண்டும், காணாமல் கள்ள மவுனத்தில் இருப்பது காம்ரேட் மாடலும் திராவிட மாடலும் இந்து விரோத செயலில் ஈடுபடுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்து காட்டுகிறது.
சூழல் என்னவாக இருந்தாலும் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கேரள மாநில காவல்துறையே வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்கள் மீது தடியடி நடத்துவதும் பக்தர்களிடையே பிராந்திய பாகுபாடு பார்ப்பதும் இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கேரள மாநில முதல்வரின் செயலும் கடும் கண்டனத்துகுரியது. அதுமட்டுமின்றி சிறிதும் ஏற்றுகொள்ள முடியாததும் ஆகும். எனவே ஐயப்ப பக்தர்களை கவுரவமாக நடத்த தெரியாத, உரிய ஏற்பாடுகளை செய்ய முடியாத கம்யூனிஸ்ட் அரசு சபரி மலை சன்னிதானத்தில் இருந்து விலகிகொண்டு பொறுப்பை மத்திய படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT