Published : 09 Jan 2024 03:55 PM
Last Updated : 09 Jan 2024 03:55 PM
சென்னை: “உத்தரப் பிரதேசம் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும்போது, தமிழகம் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை மட்டும் ஈர்ப்பது ஏன்?” என்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பணம் வரவேண்டும். குறிப்பாக, அதன்மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய பணம் வர வேண்டும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவை தங்களது முதலீடுகளுக்கு நல்ல வருவாய் திரும்பத் தரக்கூடிய நாடாக உலக நாடுகள் பார்க்கத் தொடங்கியுள்ளன.
இன்றைக்கு அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா இந்த மூன்று நாடுகள்தான் முதல் மூன்று இடங்களில் இருக்கும். இந்தியாவில் நிலவும் நிலைத்த அரசியல் தன்மை மற்றும் இந்திய மக்களின் உழைப்பின் காரணமாக அந்நிய முதலீடுகள் அதிகளவில் இந்தியாவுக்கு வருகிறது.
தமிழக அரசு 6.60 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்துக்கு பாஜக எதிர்பார்த்தது. மூன்றாண்டுகளில் இந்தியாவில் நடந்த முக்கியமான முதலீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் 2023 பிப்ரவரியில் இதேபோல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் மூலம் உ.பி 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது. தமிழக அரசு ஈர்த்ததைவிட 5 மடங்கு முதலீடுகளை உத்தரப் பிரதேசம் ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக, அங்குள்ள 75 மாவட்டங்களுக்கும் முதலீடுகளை ஈர்த்திருந்தனர். உ.பி.யின் மிக மோசமான, வறட்சியான பகுதியாக இருக்கக் கூடிய பூர்வஞ்சல் பகுதிக்கு மட்டும் ரூ.9 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளனர். அரசியலுக்காக இந்த ஒப்பீட்டை செய்யவில்லை.
கர்நாடகாவில் 2022 பிப்ரவரியில், 9 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு ஜன.10 முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முந்தைய பூர்வாங்கமாக 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதாவது, மாநாடு நடத்துவதற்கு முன்பாக மூன்று நாட்களில் இந்த தொகையை ஈர்த்துள்ளது. இவையெல்லாம், எந்தளவுக்கு தமிழக அரசு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. தமிழக அரசைப் பாராட்டுகிறோம். அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
திமுகவினர் தேர்தல் சமயத்தில், அதானி குழுமத்தை மிக தவறாக பேசியவர்கள். அதானிதான் பாஜகவுக்கு நிதிஉதவி செய்வதாகவும், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் தொடர்பு உள்ளதாக சிலர் கூறினர். ஆனால், இப்போது அதானியிடமிருந்து 42 ஆயிரத்து 768 கோடி ரூபாய் வந்த பிறகு, ட்விட்டரில் திமுகவின் தலைவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். அம்பானி 35 ஆயிரம் கோடி முதலீடுகளை அறிவித்துள்ளார். டாடா குழுமம், 83 ஆயிரத்து 212 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. எந்தளவுக்கு தமிழகத்தில் அரசியல் எல்லாம் விட்டுவிட்டு, சில கட்சிகள் தமிழகத்தினுடைய முன்னேற்றத்துக்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமக்கு சொல்லியிருக்கிறது.
தமிழகத்துக்கு வந்திருக்கக் கூடிய அதிகமான முதலீடுகள், எந்தெந்த துறைக்கு வந்திருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ், உற்பத்தி, ஹார்டுவேர், ஐடி, சர்வீஸ் உள்ளிட்ட துறைகளுக்கு வந்துள்ளது. இந்த அனைத்து துறைகளுக்கும் பிரதமர் மோடி PLI (Production Linkiung Incentive Scheme) என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு, மிக வேகமாக இந்த துறைகளுக்கு முதலீடுகள் வரத் தொடங்கியிருக்கிறது. பேட்டரி, சோலார், டெக்ஸ்டைல், மொபைல், உணவு பதப்படுத்துதல், டெலிகாம், ஒயிட் குட்ஸ், ஐடி ஹார்டுவேர் மற்றும் மெடிக்கல் டிவைஸ் என இந்த துறைகளில் யார் இந்தியாவில் முதலீடு செய்தாலும், மத்திய அரசிடமிருந்து 1 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய் வரை அந்நிறுவனங்கள் இன்சென்டிவ் பெறலாம். இதுவரை 95 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.
இந்த PLI திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள பல நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதால், முதலீடுகளை இந்தியாவில் அதிகம் செய்கின்றனர். நாம் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. தமிழகத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு இன்னும் அதிகமாக ஊக்கமளிக்க வேண்டியுள்ளது.
அதேபோல், 2019 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, மகராஷ்டிரா 61 பில்லியன் டாலர், கர்நாடகா 47 பில்லியன் டாலர், குஜராத் 34 பில்லியன் டாலர், டெல்லி 28 பில்லியன் டாலர், தமிழ்நாடு 9 பில்லியன் டாலர், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளன. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும்போது, தமிழ்நாடு 6.6 லட்சம் கோடி முதலீடுகளை மட்டும் ஈர்ப்பது ஏன் என்று அரசைக் கேட்டுக்கொண்டு, அடுத்தமுறை இன்னும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT