Published : 09 Jan 2024 02:51 AM
Last Updated : 09 Jan 2024 02:51 AM

கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து வீசும் கட்டுக்கடங்காத துர்நாற்றம்: கொரட்டூர் மக்கள் அவதி

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குடியிருப்புவாசிகள் புகார்.

சென்னை: கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து கட்டுக்கடங்காத துர்நாற்றம் வீசுவதால் கொரட்டூர் மக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னை கொரட்டூர் டிஎன்எச்பி காலனியில் கேஸ்டல் 222 என்னும் குடியிருப்பு உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 2019-ம் ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்குள்ள 222 வீடுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்புக்கு அருகிலேயே சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து துர்நாற்றம் வீசுவதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: நீர் உந்து நிலையம் அருகிலேயே எங்கள் குடியிருப்பு உள்ளது.

பிற பகுதிகளை ஒப்பிடும்போது இங்கிருக்கும் நாங்களே அதிகளவு பாதிப்படைகிறோம். 24 மணி நேரமும் துர்நாற்றத்துக்கு இடையே வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக நாளொன்றுக்கு 4 முறை நிலையத்தை இயக்குவார்கள்.

அப்போதெல்லாம் வீட்டுக்குள் வரும் துர்நாற்றத்தை போக்க எதுவுமே செய்ய முடியாமல் கையறு நிலையில் தவித்து வருகிறோம். திடீரென நள்ளிரவில் கூட துர்நாற்றம் வரும். இதை உணர்ந்து உடனடியாக கதவு, ஜன்னல் அனைத்தையும் அடைத்து வைத்தால் மட்டுமே ஓரளவுக்கு தூங்க முடியும்.

இதைக் கட்டுப்படுத்த பல முறை கோரிக்கை வைத்ததன் விளைவாகவே, வெளியேறும் துர்நாற்றம் குடியிருப்புக்கு நேரடியாக வராத வகையில் தடுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டன. அதற்கான தொகை எங்களிடம் இருந்துதான் வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த தடுப்புகள் முற்றிலும் சேதமடைந்ததால் நாங்களே அகற்றிவிட்டோம். இதனால், கடும் இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

அடுத்தடுத்த கட்டிடம் என்பதால் சுமார் 100 வீடுகளில் இருப்போர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு தொடர் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முகத்தில் பருக்கள் அதிகரிக்கின்றன. வாயு தாக்குவதால் வீட்டு உபயோக பொருட்களில் துருப்பிடித்தல் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என அனைத்து மின்சாதனங்களும் பழுதாகின்றன. ஜன்னல் கம்பிகள் கூட துருப்பிடித்துள்ளன. வாகனங்களும் பாதிக்கப்படுகின்றன. துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த அவ்வப்போது பொடி தூவினர். தற்போது பொடியும் தூவுவது இல்லை.

இதுகுறித்து பல முறை மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலரிடம் புகாரளித்தோம். புகார் கொண்டு செல்லும்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அரசு உயரதிகாரிகளிடம் கொண்டு சென்றால், இங்கு யார் வீடு வாங்க சொன்னது என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன.

வேறேதோ கட்டுமான நிறுவனத்திடம் நாங்கள் வீடுகளை வாங்கவில்லையே, அரசு நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கியிருக்கிறோம். அண்மையில்கூட கிணறுகளில் இருந்து கழிவுகளுடன் நீர் வெளியேறியது. இதனால் கடுமையாக பாதிப்படைந்தோம். எனவே, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு துர்நாற்றத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் கூறும்போது, "கொரட்டூரில் சம்பந்தப்பட்ட நிலையத்தில் இருந்து அதிகளவு துர்நாற்றம் வருவதாக புகார்கள் கிடைக்கப்பெற்றன. இதையடுத்து அலுவலர்கள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேப்பியர் பூங்கா, ஜி.கே.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நிலையங்களில் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து உருவாகும் எச்2எஸ் வாயு மின் விசிறியால் (துருப்பிடிக்காத எஃகால் ஆனது) உறிஞ்சப்படுகிறது. அவ்வாறு உறிஞ்சப்படும் வாயு முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் தொட்டி வழியாக அனுப்பப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வடிகட்டி மூலம் சல்பர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

அந்த சல்பரும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை இங்கும் பயன்படுத்தி துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்தத் தொழில்நுட்ப கொள்முதலுக்கான டெண்டர் கோர கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விரைவில் டெண்டர் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x