Published : 09 Jan 2024 10:11 AM
Last Updated : 09 Jan 2024 10:11 AM
சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் வழக்கம் போல் பேருந்துகளை இயக்கப்படுகின்றன, மக்கள் எவ்வித சிரமுமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளான 6 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று (ஜன.9) காலை போராட்டம் தொடங்கியது. பரவலாக அனைத்துப் பணிமனைகளிலுமே பேருந்துகள் இயக்கம் இருந்தாலும் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் பேருந்து இயக்கத்தை ஆய்வு செய்தபின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று காலை முதல் பேருந்து சேவை வழக்கமாகவே இருக்கிறது. 95 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எங்காவது ஓரிரு இடங்களில் பேருந்து சேவை குறைவாக இருப்பதாகப் புகார் வந்தால் அங்கும் பேருந்துகள் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம்.
காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட இரண்டு கோரிக்கைகள் நடைமுறையில் தான் உள்ளன. அப்படியிருக்க, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 2 கோரிக்கைகளையும் மீண்டும் முன்வைப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளைக் கூட கடந்த பேச்சுவார்த்தையில் நிறைவேற்றினோம். தமிழக அரசின் நிதிநிலை சரியான பின்னர் அகவிலைப்படி தொடர்பான கோரிக்கையை அரசு நிறைவேற்றும். அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது அதிமுக ஆட்சியில்தான் என்பதே இபிஎஸ்-ஸே அவருடைய அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 96 மாத நிலுவை என்றால் அது அதிமுக ஆட்சியில் நடந்ததுதானே. அந்தத் தொகையை அதிமுக ஆட்சியில் வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டனர். ஆகையால் அகவிலைப்படி உயர்வு வழங்க கால அவகாசம் மட்டும்தான் நாங்கள் கேட்கிறோம்.
போராடுவது உங்கள் உரிமை. ஆனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏதும் இன்றி போராட வேண்டும். அரசியல் காரணங்களுக்காகப் போராட்டம் நடத்துவது திசைதிருப்பும் செயலாகும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
போக்குவரத்துத் துறை தகவல்: இதற்கிடையில் தமிழகத்தில் காலை 8 மணி நிலவரப்படி 93.90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. கோவையில் 95.17%, கும்பகோணத்தில் 91.17%, மதுரையில் 98.12 சதவீதம்,நெல்லையில் 98.76% பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT