Published : 09 Jan 2024 09:06 AM
Last Updated : 09 Jan 2024 09:06 AM

“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்” எனக் குறிப்பிட்டு அமைச்சர், அதிகாரிகள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு, ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில், நேற்று முன்தினம் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில், மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 நாள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன‌. அதேபோல 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகை தந்திருந்தனர். ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM2024)-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி. ஆர். பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM2024)

'எல்லோருக்கும் எல்லாம்', 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x