Published : 09 Jan 2024 08:46 AM
Last Updated : 09 Jan 2024 08:46 AM
கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொழில் மற்றும் வேலை காரணமாக கோவையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். சொகுசு பயணம் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் பலரும் ஆம்னி பேருந்துகளை நாடு கின்றனர்.
கோவை காந்திபுரத்திலுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பொன்னமராவதி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கும், திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி போன்ற வெளி மாநில நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கின்றனர். அதிகபட்சமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூருவுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், கோவையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால், 3 மடங்கு, 4 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதை தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: வழக்கமாக கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.950, பெங்களூரு வுக்கு ரூ.1,600, திருநெல்வேலிக்கு ரூ.650, தூத்துக்குடிக்கு ரூ.700, பொன்னமராவதிக்கு ரூ.500, திருப்பதிக்கு ரூ.1,400, புதுச்சேரிக்கு ரூ.1,300 வரை கட்டணம் இருக்கும். ஆனால், பொங்கல் பண்டிகை தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து முன்பதிவு செய்தால் சென்னைக்கு ரூ.2,000, பெங்களூருவுக்கு ரூ.2,500, திருநெல்வேலிக்கு ரூ.2,500, தூத்துக்குடிக்கு ரூ.2,400, பொன்னமராவதிக்கு ரூ.1,500, திருப்பதிக்கு ரூ.3,100, புதுச்சேரிக்கு ரூ.2,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் இக்கட்டணம் மேலும் அதிகரிக்கும்’’ என்றனர்.
இது குறித்து நுகர்வோர் அமைப்பான சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகள் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன. இதை பயன்படுத்தி, பண்டிகை காலங்களில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று, நான்கு மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதை அரசு தடுக்க வேண்டும். கோவையில் தென்மாவட்ட பகுதிகள், டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்’’ என்றனர்.
இன்று ஆலோசனை: கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘விதிமுறைகளின் படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பின்பற்றவேண்டும், கூடுதல் கட்டணம் நிர்ணயிக் கக்கூடாது என சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இது தொடர்பாக இன்று ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூடுதல் கட்டணம் நிர்ணயித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT