Published : 09 Jan 2024 04:10 AM
Last Updated : 09 Jan 2024 04:10 AM

நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று, ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (9, 10-ம் தேதி) கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். யாரும் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம். அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நாலுமுக்கு பகுதியில் 39 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): மாஞ்சோலை- 19, காக்காச்சி- 30, ஊத்து- 35, அம்பாசமுத்திரம்- 3, சேரன்மகாதேவி- 1.20, மணிமுத்தாறு- 0.80, பாளையங்கோட்டை- 2.40, பாபநாசம், சேர்வலாறு- தலா 2, கன்னடியன் அணைக்கட்டில் 1.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 141.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,171 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 3,629 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.67 அடியாக இருந்தது. அணைக்கு 1,592 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,048 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 27 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 11 மி.மீ., ராமநதி அணையில் 3 மி.மீ., குண்டாறு அணையில் 2.20 மி.மீ., கருப்பாநதி அணையில் 2 மி.மீ., செங்கோட்டை, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடையம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், கீழப்பாவூர், கடைய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் நேற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்ததால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x