Published : 08 Jan 2024 05:16 PM
Last Updated : 08 Jan 2024 05:16 PM
சென்னை: "கோரிக்கைகளை நிறைவேற்றித் தர இயலாது என்று கூறியவர்களுக்கு மத்தியில், நிதி நிலை சீரான பிறகு செய்து தருவதாக கூறும் தமிழக அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபவடுவது என்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதே ஆகும். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்று செய்தால், மக்களுக்கு அரசின்மீது கோபம் வரும் என்ற நோக்கத்தில் செய்கிறார்கள்" என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தமிழக அரசு உடனான போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் தொடங்கவுள்ளதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டிய சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்புகளை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: சென்னையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் 12-ம் தேதி முதல் இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி புறவழிச்சாலை மாநகராட்சி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றோடு இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்.
ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களும், நாள் ஒன்றுக்கு 2,100 பேருந்துகள் வீதம் மொத்தம் 3 நாட்களும் 6,300 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து அந்த 3 நாட்களும் 4,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, சென்னையில் இருந்து இந்த மூன்று நாட்களிலும் 11,006 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 8,408 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆக மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பெங்களூரு செல்கின்ற SETC, இசிஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி வரை செல்கின்ற SETC பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவற்றைத் தவிர, NH-45 வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்கிற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தைத் தவிர, வேறு எங்கிருந்தும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் எனப்படும் SETC பேருந்துகள் இயக்கப்படாது.
மற்ற பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது.
பொங்கல் திருநாள் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக ஜனவரி 16-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி முடிய தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், பிற ஊர்களில் இருந்து 6,459 பேருந்துகள் இயக்கப்படும். மொத்தமாக, பொங்கலுக்குப் பிறகான நாட்களில் 17,589 பேருந்துகள் இயக்கப்படும். இதற்கு முன்பதிவு செய்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரத்தில் 1 முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும். மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.
முன்பதிவு செய்துகொள்ள www.tnstc.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் tnstc official app என்ற செயலியிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தாலும், அல்லது பேருந்து இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும், புகார் தெரிவிக்க 94450 14450 மற்றும் 94450 14436 ஆகிய இரண்டு எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க 1800 425 6151 என்று எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அதேபோல் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-24749002, 044-26280445, 044-26281611 தொடர்பு கொள்ளலாம்.
சிறப்புப் பேருந்து நிலையங்களில் இருந்து மக்கள் செல்வதற்கு ஏதுவாக, கோயம்பேட்டில் இருந்து 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். இதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த பேருந்துகள் இயக்கப்படும்.
குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழித்தடங்களிலும் திருச்சி கரூர் வழித்தடங்களிலும், மதுரை திருநெல்வேலி வழித்தடங்களிலும் தூத்துக்குடி திருச்செந்தூர் வழித்தடங்களிலும் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதேபோல் போரூர்,சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து செல்லும்.ஆம்னி பேருந்துகள் பொங்கல் பண்டிகை வரை கோயம்பேட்டில் செயல்படும்.பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். 5 நிமிட இடைவேளையில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்" என்று அவர் கூறினார்.
வேலைநிறுத்தம் குறித்து... - போக்குவரத்து தொழிற்சங்க வேலைநிறுத்த அறிவிப்பு குறித்து அவர் கூறும்போது, "போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உடன் ஏற்கெனவே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதுகூட, அவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை மீறி ஏதாவது நடவடிக்கை இருந்தால், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தையின்போது, அரசால் என்ன செய்ய முடியும். எதை செய்வது கடினம் என்பது குறித்து கூறியிருக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்யாமல்விட்டதை, திமுக ஆட்சி அமைந்தபிறகு அதிமுக தொழிற்சங்கம் கேட்பதும், இபிஎஸ் கேட்பதும் வேடிக்கையான ஒன்று. அவர்களால் செய்ய முடியாமல் விட்டுவிட்டனர். அதை நாங்கள் செய்யமுடியாது என்று கூறவில்லை. நிதி நிலை சீரான பிறகு செய்து தருவதாக கூறியிருக்கிறோம்.
எனவே, செய்து தரவே முடியாது என்று கூறியவர்களுக்கு மத்தியில், நிதிநிலை சீரான பிறகு செய்து தருவோம் என்று கூறும் தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபவடுவது என்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதே ஆகும். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்று செய்தால், மக்களுக்கு அரசின்மீது கோபம் வரும் என்ற நோக்கத்தில் செய்கிறார்கள். ஆனால், பொதுமக்கள் இவற்றையெல்லாம் அறிவார்கள். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதுதான் மக்களுக்கு கோபம் வரும்" என்றார் அமைச்சர்.
‘திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்’ - முன்னதாக, அரசு உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், “6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தையில், ‘எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. முழுக்க முழுக்க நியாயமற்ற பதில் இது. அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாத பதில் இது. ஊழியர்களின் கோரிக்கைகள் எதன் மீதும் இப்போது முடிவு சொல்ல முடியாது என்று அரசு தரப்பும், அமைச்சரும் சொன்னார்கள். அதனை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.
இந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. தமிழகத்தில் இருக்கிற எந்த துறையிலும், எந்த பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளிகளுக்கு இந்த அரசு இழைத்துக்கொண்டே இருக்கிறது. பஞ்ச படியை பொறுத்தவரை எங்களுக்கு அதிகரித்து தர வேண்டும் என்று கேட்கவில்லை, எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை தான் கேட்கிறோம். எங்களுக்கு அரசு தரவேண்டிய கடன். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம், பஞ்ச படி பாக்கியை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதேயே இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். இதையும் பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.
எதுவும் செய்ய முடியாது என முடிவெடுத்து மிகப் பெரிய தவறை அரசு இழைக்கிறது. எனவே, வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியாது. திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். எங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறு கோரிக்கையில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்தபின்னும்கூட அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இன்று மாலை வரை நேரம் இருக்கிறது. அமைச்சர் எங்களை அழைத்து பேச தயாராக இருந்தால் நாங்களும் தயார். வேலைநிறுத்தம் என்ற தவிர்க்க முடியாத சூழலுக்கு எங்களை அரசு தள்ளியுள்ளது” என தெரிவித்தனர்.
வேலைநிறுத்த பின்னணி: போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. பொங்கலுக்குப் பின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், பணிமனைகளில் ஆர்ப்பாட்டம், மக்களை சந்தித்து ஆதரவு கோருதல் என வேலைநிறுத்தத்துக்கான பணிகளை தொழிற்சங்கங்கள் தீவிரப்படுத்தி வந்தன.
இதையடுத்து, வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி உடனடியாக தொழிற்சங்கங்களை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் மற்றும் ஊதிய பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதுதொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், பேச்சுவார்த்தை நேற்றைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியதால் பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்றது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT