Published : 08 Jan 2024 04:12 PM
Last Updated : 08 Jan 2024 04:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் ஏராளமான ஏக்கரில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலங்களை ஆய்வு செய்த அம்மாநில அமைச்சர் தேனீ ஜெயக்குமார், விவசாய நிலங்கள் பாதிப்பு பற்றி கணக்கெடுப்பு நடத்தி முதல்வரிடம் கலந்து பேசி நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தார்.
புதுச்சேரியில் தொடர் மழைப் பொழிவால் கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், கரியமாணிக்கம், திருக்கனுார், கோர்க்காடு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிரும், ஒரு சில பகுதிகளில் மணிலாவும் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஓரிரு நாள் மழை பெய்தால் இந்தப் பயிர்கள் முழுமையாக அழுகி வீணாகும்.
இது பற்றி புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் ரவி கூறுகையில், "புதுச்சேரியில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து தரையோடு தரையாக மடிந்து மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னி, பிபிடி போன்ற நெல் ரகங்கள் மார்கழி கடைசியிலும் தை மாதம் முதலிலும், அதாவது பொங்கலுக்கு அறுவடை செய்யும் காலக்கட்டமாகும். ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் இப்பொழுது பெய்யும் மழை பருவம் தவறி செய்வதால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மழை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மழை நின்ற போதும் நெல் அறுவடை செய்து நெல் மணிகளை வெளியில் கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 15 - 20 நாள் முதல் ஒரு மாத காலம் வரை ஆகும். இதனால் நெல் விளைச்சல் என்பது முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. எனவே, புதுச்சேரி அரசு வேளாண் நலத்துறை பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்குரிய இழப்பீடு தொகையை அறிவித்து உடனடியாக வழங்கி விவசாயிகள் உழவர் திருநாளை நிம்மதியோடு கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமி காந்தனுடன் சென்று கரிக்கலாம்பாக்கத்தில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டார். நீர் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நீர் வெளியேற முடியாமல் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறினர்.
ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் தேனீ ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு , "சேதமடைந்த விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல்வருடன் பேசி நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மழைக் காலத்துக்குள் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT