Published : 08 Jan 2024 02:43 PM
Last Updated : 08 Jan 2024 02:43 PM
சிவகாசி: "தேர்தல் நேரத்தில் மக்கள் மீது பாசம் காட்டுவது பிரதமர் மோடியின் பலம். மக்களவை தேர்தல் வருவதால் தமிழக வெள்ள பாதிப்பிற்கு தேவையான நிதியை மோடி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது" என சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்பி கூறினார்.
சிவகாசி மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான கலையரங்கம், ரேஷன் கடை, போர்வெல், உயர் மின்கோபுர விளக்கு உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்பி அடிக்கல் நாட்டினார். இதில் எம்எல்ஏ அசோகன், மேயர் சங்கீதா, ஆணையர் கிருஷ்ண மூர்த்தி, துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், "தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட கடும் முயற்சியின் மூலம் கடந்த 7ம் தேதி தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தின் உற்பத்தி 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்து நாட்டின் சிறந்த தொழில் மாநிலமாக முன்னேறும். இதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிக தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது. நமது மாவட்டத்தை சேர்ந்த நிதியமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் முயற்சியில் விருதுநகரில் புதிய தொழில்கள் துவங்கும்.
மாநில அரசு நிவாரணம் அளித்து இருந்தாலும், பாதிப்பு அதிகமாக இருப்பதால், வழக்கமான பாரபட்சத்தைக் காட்டாமல் மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் பேச மட்டுமே செய்கிறார். தேர்தல் நேரத்தில் மக்கள் மீது பாசம் காட்டுவது மோடியின் பலம். மக்களவை தேர்தல் வருவதால் தமிழக வெள்ள பாதிப்பிற்கு தேவையான நிதியை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. டி.ஆர் பாலு எம்பி தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்ட போது, அவர் நேரம் ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது.
இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாஜக வெற்றி பெரும் இடங்களில் எல்லாம் தனி மனிதனின் உடை, உணவு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஜனவரி 14ம் தேதி தொடங்கும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை 90 நாட்களில் 6,500 கிலோ மீட்டர் கடந்து 100 மக்களவைத் தொகுதிகளுக்குச் செல்லும். அந்த தொகுதிகளில் ராகுல் காந்தி பேசவுள்ளார். இந்த யாத்திரை மிகப் பெரிய திருப்பு முனையாக இண்டியா கூட்டணிக்கு அமையும்" என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT