Published : 08 Jan 2024 04:41 AM
Last Updated : 08 Jan 2024 04:41 AM

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.50,634 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாளில் ரூ.50,634 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோத்ரெஜ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இதன் அடிப்படையில், பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டின் முதல்நாளான நேற்று, ஹூண்டாய், குவால்காம், பர்ஸ்ட் சோலார், கோத்ரெஜ், டாடா, பெகட்ரான், ஜேஎஸ்டபிள்யூ, டிவிஎஸ், மிட்சுபிஷி, ஏ.பி.மோலார் மெர்ஸ்க், வின் பாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில், ரூ.50,634 கோடி முதலீட்டுக்கான புதிய ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 49,550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், துறைவாரியாக பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒரே நாளில் 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாநாட்டின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இம்மாநாட்டில் எவ்வளவு கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்ற இறுதி நிலவரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பார். சுமார் 5.5 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தமிழக அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு குறைக் கடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024, மற்றும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, க்வால்காம் டிசைன் சென்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனங்களின் திட்டங்களை தொடங்கி வைத்து, கோத்ரெஜ் நிறுவனத்தின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம் தமிழகம். பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக, மேலும், தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்' என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இம்மாநாடு தொழில்மயமாக்கல் வரலாற்றில், ஒரு மகத்தான அத்தியாயமாக இருக்கப் போகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதற்காகவே, 2030-ம் ஆண்டுக்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளேன்.

ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம், சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவ வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் இந்த அம்சங்கள் தமிழகத்தில் இருப்பதால்தான் முதலீடுகள் குவிகின்றன. தமிழகம் முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்கள் லட்சியம். அதனால்தான், மாநிலம் முழுவதும் பரவலாக தொழில்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், முதலீடு செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம். தமிழக அரசு உங்களுக்கு அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: தமிழ்நாடு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார இலக்கை அடைய பயணித்து கொண்டிருப்பது இந்தியாவுக்குள் மட்டுமின்றி தமிழகத்துக்குள்ளும் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர வழிவகுக்கும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும். இவற்றின் மூலம் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும். இதற்கு வித்திட்ட தமிழக மக்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். இந்த சென்னை வர்த்தக மைய வளாகத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்கியுள்ளதைப்போல், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைத்து செயல்படும்போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பிரதமரின் மனதில் தமிழகத்துக்கு சிறப்பான இடம் உண்டு. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் பெருவளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2 காலாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்கள் வேலைக்கு வரும்போது, வீட்டு வேலைகளை செய்ய தொழில்நுட்பங்களை மாற்றி அமைப்பார்கள். இதனால் வருங்காலத்தில் உலகளவில் துணி துவைக்கும் இயந்திரம், டிஸ் வாசர்ஸ் போன்றவற்றுக்கு முதன்மை சந்தையாக இந்தியா விளங்கும்.

அடுத்த 30 ஆண்டுகளில், 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி, இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இதனால் உலகளவில் வர்த்தகம் செய்வதற்கு சிறந்த இடமாக இந்தியா மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றியுரையாற்றினார்.

மாநாட்டில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பல வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x