Published : 08 Jan 2024 05:12 AM
Last Updated : 08 Jan 2024 05:12 AM
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசால் 1975-ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வங்கிசாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வைப்புநிதி பெறப்படுகிறது. அந்த வைப்பு நிதிகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் இரண்டு திட்டங்களில் அளிக்கப்படுகிறது.
இதன்படி காலமுறை வட்டி செலுத்தும் திட்டத்தில் (பிஐபிஸ்) மாதவட்டி, காலாண்டு வட்டி மற்றும் வருடாந்திர வட்டியாக அளிக்கப்படுகிறது. மற்றொரு திட்டமான ‘பணபெருக்கி’ திட்டத்தில் வைப்பீடு முதிர்வடையும்போது வட்டியுடன், முதலீடு திரும்ப அளிக்கும் திட்டம் உள்ளது. இங்கு குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு பெறப்படுகிறது. ஆண்டுதோறும் வட்டி விகிதம் மாற்றியமைக்கும் வகையில், நடப்பாண்டுக்கான வட்டி விகிதமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான இனங்களில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்களிடம் இருந்து 2 ஆண்டுகளுக்கு பெறப்படும் வைப்புத் தொகைக்கு காலாண்டுதோறும் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.60-ல் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.85-ல் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் பணப்பெருக்கி திட்டத்தில் ஓராண்டுக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு 7.50-ல் இருந்து 7.75 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.75-ல் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பணப்பெருக்கி திட்டத்தில் ரூ.50 ஆயிரத்தை ஓராண்டுக்கு முதலீடு செய்யும்போது முதிர்வுத் தொகையாக ரூ.54,122 மற்றும் 5 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.75,213 வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.tdfc.in என்ற இணையதளம் அல்லது 044 2533 3930 என்ற எண்ணை அணுகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT