Published : 08 Jan 2024 05:43 AM
Last Updated : 08 Jan 2024 05:43 AM

திண்டுக்கல்லில் கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி: வியப்பில் ஆழ்த்திய ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கண்காட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

திண்டுக்கல் அசில் ஆர்கனைசேஷன், உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்திந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் 9-வது ஆண்டாக கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் வந்த சேவல்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

இதில், கீரி, மயில், எண்ணெய் கருப்பு, கொக்குவெள்ளை, காகம்என பல்வேறு வகையான கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள் இடம்பெற்றன. இந்தக் கண்காட்சியை திரளானோர் கண்டு ரசித்தனர். சிறந்த சேவல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ.3லட்சம் மதிப்புள்ள கிளி மூக்கு விசிறிவால் சேவல் பார்வை யாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கிருஷ்ணகிரியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கிளி மூக்குவிசிறிவால் சேவலை கொண்டு வந்திருந்த பிரியா கூறும்போது, "சேவல்கள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். நாங்கள் வளர்த்து வரும் கிளிமூக்கு விசிறிவால் சேவலை, இதுபோன்று எங்கு கண்காட்சி நடந்தாலும் காட்சிப்படுத்துகிறோம்.

நாட்டு இன கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள் அழியும் தருவாயில் உள்ளதால், அவற்றைப் பாதுகாக்க எங்களால் ஆன முயற்சியாக இந்த சேவலை வளர்த்து வருகிறோம். இந்த செங்கீரி கிளிமூக்கு விசிறிவால் சேவலின் மதிப்பு தற்போது ரூ.3 லட்சமாகும்" என்றார்.

சேவல் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நெல்சன் கூறும்போது, "அழியும் தருவாயில் உள்ள பாரம்பரிய சேவல்களைப் பாதுகாக்க இந்த கண்காட்சியை நடத்துகிறோம். இதில் 400 சேவல்கள் இடம்பெற்றன. கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் கிளிமூக்கு விசிறிவால் சேவல்களை வளர்க்கின்றனர்.

இந்த சேவல்களின் மதிப்பு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளது. சிறந்த சேவல்களைத் தேர்வு செய்து, பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துகிறோம்" என்றார்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட அசில் ஆர்கனைசேஷன் தலைவர் உஸ்மான், செயலாளர் பிரபாத், துணைச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x