Published : 08 Jan 2024 06:15 AM
Last Updated : 08 Jan 2024 06:15 AM

பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடியில் பல்வேறு வசதிகளுடன் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தமிழ் திரை உலகம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: அப்பா, அம்மா வைத்த பெயரை கூட மறந்துவிடும் அளவுக்கு கலைஞர் என்றுதான் தமிழக மக்கள் உச்சரித்து இருக்கிறார்கள். அவர் தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தொண்டர்கள் கொடுத்த தலைவர் பட்டத்தோடு, மக்கள் கொடுத்த கலைஞர் பட்டத்துக்கு பொருத்தமானவர் அவர்.

தனது எழுத்து, பேச்சால் ரசிகர்களின் உள்ளத்தில் இருந்தவர் கருணாநிதி. அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினால், அப்படம் வெற்றி என்றே கருதப்படும். அவரது வசனத்தை கூறி நடிப்பு துறையினர் வாய்ப்பு கேட்கும் சூழல்ஏற்பட்டது. ராஜகுமாரி முதல் பொன்னர்சங்கர் வரை அவரது சினிமா பயணம் மிகப்பெரியது. திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அந்தவகையில், தற்போதைய திமுக ஆட்சியும் தொடர்கிறது.

அந்த வகையில் ரூ.25 கோடியில் நான்கு படப்பிடிப்பு தளத்துடன் எம்ஜிஆர் பிலிம் சிட்டி விரைவில் அமைக்கப்பட உள் ளது. இதுபோல, கமல்ஹாசன் வைத்த கோரிக்கையின் பேரில், சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நவீன திரைப்பட நகரில் நவீன தொழில்நுட்ப அம்சங்களான வி.எஃப்.எஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, பெரிய எல்இடி வால், 5 நட்சத்திர ஓட்டல் என சகல வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x