Published : 08 Jan 2024 04:08 AM
Last Updated : 08 Jan 2024 04:08 AM
திருநெல்வேலி / தென்காசி: வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலு முக்கு பகுதியில் 68 மி.மீ. மழை பதிவானது. காக்காச்சி பகுதியில் 52 மி.மீ., கன்னடியன் அணைக் கட்டில் 51.60 மி.மீ., பாபநாசத்தில் 50 மி.மீ., ஊத்து பகுதியில் 48 மி.மீ., மணி முத்தாறில் 46 மி.மீ., மாஞ்சோலை பகுதியில் 45 மி.மீ., சேர்வலாறில் 36 மி.மீ., அம்பா சமுத்திரத்தில் 28 மி.மீ., களக்காட்டில் 16.20 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 7 மி.மீ., சேரன் மகாதேவியில் 6.8 மி.மீ, நாங்குநேரியில் 2.80 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவானது.
ஆட்சியர் எச்சரிக்கை: “திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் எதுவும் இல்லை. இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணையில் 30 மி.மீ., கடனாநதி அணையில் 22 மி.மீ., கருப்பாநதி அணையில் 21 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., குண்டாறு அணை, தென்காசியில் தலா 6.20 மி.மீ., சங்கரன்கோவிலில் 5 மி.மீ., செங் கோட்டையில் 4.60 மி.மீ. மழை பதிவானது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் குளிக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment