Last Updated : 07 Jan, 2024 10:10 PM

3  

Published : 07 Jan 2024 10:10 PM
Last Updated : 07 Jan 2024 10:10 PM

“பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது” -  மதுரை எஸ்டிபிஐ மாநாட்டில் இபிஎஸ் திட்டவட்டம்

மாநாட்டில் பேசிய இபிஎஸ்

மதுரை: மதுரை - பாண்டிகோயில் அருகிலுள்ள திடலில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தொடங்கியது. மகாத்மா காந்தி என பெயரிட்டு இருந்த மாநாட்டுத் திடலில் கட்சி கொடியை மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஏற்றி, மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீத் அகமது தொடக்க உரையாற்றினார். அகில இந்திய தலைவர் பைஸி, பொதுச் செயலர்கள் அகமது நவவி, உமர் பாரூக், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலர்கள் ரத்தினம், நஜ்டா பேகம் மாநாடு நோக்கம் குறித்து பேசினர்.

இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்றார். அவர் மாலை 6 மணிக்கு மாநாட்டு திடல் பகுதிக்கு வந்தார். அவரை திறந்த வேனில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் தொண்டர்களுக்கு மத்தியில் அழைத்து வந்தார்.

மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் பேசியதாவது: ஆரவாரத்துடன் என்னை வரவேற்றனர். இதன் மூலம் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம் என, தெரிகிறது. முபாரக் இக்கட்சியை இமை போன்று பாதுகாக்கிறார். இக்கட்சியின் நிர்வாகிகள் சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளனர். மதசார்பின்மையை மேடையில் காண முடிகிறது. ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறீர்கள். உங்கள் கூட்டணி தலைவர்கள் போலி மதசார்பின்மையை தோற்றுவிக்கின்றனர். இக்கூட்டம் தான் மதசார்பின்மை கூட்டம்.

நான் முதல்வர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தவழ்ந்து உயர் பதவிக்கு வந்ததாக கொச்சைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார். நான் உழைத்து வந்தேன். உங்கள் தந்தை முதல்வராக இருந்ததால் முதல்வராக வந்துள்ளீர்கள். உழைப்பவர்கள் கவலைப்படமாட்டார்கள். எஸ்டிபிஐ கட்சியினரும் அப்படிதான். வெல்லட்டும் மதசார்பின்மை என்ற தலைப்பு அருமை. குடும்பம், குடும்பமாக இஸ்லாமிய சகோதரிகள் வந்துள்ளனர்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாண்டு சிறப்பான ஆண்டாக அமையும். மதுரை மண் ராசியானது. இந்த மண்ணில் தான் எஸ்டிபிஐ மாநாடு நடத்துகிறது. உங்களுக்கு வெற்றி கிட்டும். அதிமுக மாநாடும் இங்கு தான் நடந்தது. அதிமுகவை பொறுத்துவரை சிறுபான்மையினரை அரண் போன்று காக்கும். 30 ஆண்டு ஆட்சி செய்த போதிலும், மதம், சாதி சண்டையில்லை. அதிமுகவுடன் இணைந்துள்ளீர்கள். நீங்கள் எண்ணும் அளவுக்கு மகிழ்ச்சி கிட்டும். யார் சேர்ந்தாலும் வளர்ப்பது தான் அதிமுக அடிப்படை . திமுகவில் சேர்ந்தால் பின்னடைவு. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் பேசமுடியவில்லை. அடிமையாக உள்ளனர். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. யாரையும் அடிமைப்படுத்துவம் இல்லை. இங்கு சாதாரண தொண்டனும் உயரலாம்.

மக்களுக்காக பாடுபடும் கட்சி. மதம், சாதிக்கு அப்பாற்பாட்டது. தலைவர்களின் வழியில் செயல்படுகிறோம். ஆட்சியை பிடிப்பதே திமுகவின் குறிக்கோள். மத்தியில் ஆட்சியில் அமர கூட்டணி அமைத்துள்ளனர். மக்களை பற்றி கவலை இல்லை. சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் வந்தால் அழகாக பேசுவர். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்து, வீட்டு மக்களை பார்ப்பார்கள். இதுவே திமுகவின் கொள்கை. முதல்வர் முதலீட்டாளர் மாநாட்டில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பர் என கூறினார். 3 ஆயிரம் பேர் தமிழகத்தில் எப்படி தொழில் புரிய முடியும். ஏற்கனவே போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

திமுக ஒரு பச்சோந்தி கட்சி. திமுகவுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். கருணாநிதி, ஸ்டாலின் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் முதல்வராக வர துடிக்கிறார். சிறந்த ஆட்சியால் மட்டுமே மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும். இந்த ஊரைச் சேர்ந்தவர், மெத்த படித்தவருமான முன்னாள் நிதி அமைச்சர், உதயநிதியும், சபரீசனும் ரூ. 30 ஆயிரம் கோடி வைத்துக்கொண்டு தடுமாறுகின்றனர் என குறிப்பிட்டார். இந்த பணத்தை சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருந்தால் பாராட்டி இருப்பர். கொள்ளை மட்டுமே திமுக குறிக்கோள். மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் எனில் யாருடனும் கூட்டணி வைப்பார்கள். கூட்டணி வேறு, கொள்கை வேறு. நாங்கள் என்றைக்கும் சரியாக இருக்கிறோம். கொள்கைக்கு தான் முன்னுரிமை.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த பிறகும் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாக ஸ்டாலின் பேசுகிறார். சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற முடியாமல் போகுமோ என முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துள்ளது. வாக்குகளை பெறுவது மட்டுமே அவரது நோக்கம். நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தேன். அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் துணை நிற்போம். நாலரை ஆண்டில் நான் பட்ட துன்பம் அதிகம். தற்போது, விலகி சென்றவராலும் துன்பம் அனுபவித்து, அவரையும் வைத்துக் கொண்டு ஆட்சி செய்தேன். உரிமைக்கென யாரும் போராடலாம். தடுக்காமல் அனுமதி கொடுப்பது அதிமுக ஆட்சி. நாங்கள் வரும்போது, பேருந்துகளில் ஏறி பரிசோதனை செய்கின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தினர். இடையூறுகளை செய்தனர். அதிமுக மாநாட்டின் போதும், 18 கிலோ மீட்டர் வாகனங்களை நிறுத்தினர். எஸ்டிபிஐ தொண்டர்களை வேறு பகுதிக்கு திருப்பினாலும், அவர்களின் எண்ணம் உறுதியாக உள்ளது. அதிமுக அரசு இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்களை வழங்கியுள்ளோம். டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

2021 தேர்தலில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படும் என, அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது பற்றி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தபோது, திடீரென எங்களுக்கு பாசம் வந்தாக ஸ்டாலின் கூறினார். ஆட்சிக்கு வரும்போது, இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க முயற்சிப்போம். மக்களை ஏமாற்றும் நாடகம் எங்களிடம் இல்லை. திமுக இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, மாணவர்களை சீரழிக்கின்றனர். விலைவாசி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது போன்ற விலைவாசி உயர்வு சிறுபான்மை மக்களை பாதிக்கிறது. இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. எஸ்டிபிஐ கட்சிக்கு அதிமுக அடித்தளம் அமைக்கும் என்பது உண்மை. சிறுபான்மை மக்களின் ஆதரவால் 40 தொகுதிகளை வெல்வோம். தமிழகத்துக்கான புதிய திட்டங்களுக்கு மக்களவையில் குரல் கொடுப்போம். சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும்போது, ஒன்றாக சேர்ந்து குரல் கொடுப்போம். வெற்றி பெறுவோம். கண் இமை பாதுகாப்பது போன்று உங்களை அதிமுக பாதுகாப்போம். இவ்வாறு கே. பழனிச்சாமி பேசினார்.

இந்த மாநாட்டில் ஆசிய கத்தோலிக்க பேராயர் மாமன்ற தலைவர் யுவான் அம்புரோஸ், கேரள மாநில எஸ்டிபிஐ கட்சித் தலைவர் அஷ்ரப் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மீஜீத், குடந்தை திருவடிக் குடில் அடிகளார், ஈரோடு இமாம் நூருல் இஸ்லாம் மஸ்ஜித் முகமது தையிப், இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் ஹாஹூல் ஹமீது உள்ளிட்டோர் பேசினர்.

இந்த மாநாட்டில் தமிழ்மகன் உசேன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், விசுவநாதன், எஸ்பி. வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், பாஸ்கரன், மணிகண்டன், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மாநில செயலர் அபுபக்கர் சித்திக் மாநாட்டு நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினார். மாநில அமைப்பு பொதுச் செயலர் நஸ்ருதீன் நன்றி கூறினார்.

மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள்

இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. 39 கைதிகளை விடுவிக்க, ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு தமிழ்நாடு அரசு மாற்று வழியை தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு மாநாடு நன்றியை தெரிவிக்கிறது.

தேர்தல் வாக்குறுதியின்படி, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து செயல்படுத்த வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

சர்ச்சா கமிட்டியை போன்று முஸ்லிம்களின் வாழ் நிலைகளை ஆராய்ந்து அறிய சிறப்புக் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும்.

பல்கலை துணைவேந்தர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மாற்றி என்ஐஏ, வருமானவரி, அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு அச்சுறுத்துகிறது. இத்தகைய அடக்குமுறையை கண்டிக்கிறோம்.

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். சிறுபான்மைக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சிறுபான்மை சமூக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை நிலையை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அழிவுத்திட்டங்களில் இருந்து தமிழக விவசாய விளைநிலங்களை மீட்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 30 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x