Last Updated : 07 Jan, 2024 04:39 PM

 

Published : 07 Jan 2024 04:39 PM
Last Updated : 07 Jan 2024 04:39 PM

குமுளி மலைச் சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை - விதிமீறினால் ரூ.1,000 அபராதம்

குமுளி: சபரிமலை சீசனையொட்டி குமுளி மலைப் பாதையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலங்குகளை பாதுகாக்க வனச் சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 கி.மீ. தூரமுள்ள குமுளி மலைச் சாலையில் விலங்குகள் குறுக்கிட வாய்ப்புள்ளதாக வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குரங்கு, மான், யானை, காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. தற்போது சபரிமலை சீசனையொட்டி இச்சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மலைச் சாலையில் வாகனங்கள் மேலே செல்ல அனுமதி இல்லை. இறங்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

தற்போது தினமும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் இந்த சாலை வழியாக வருகின்றன. இதில் பலரும் மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்தி இயற்கை அழகை ரசிக்கின்றனர். பசுமையான சூழ்நிலை, மூடு பனியை புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும் வழி நெடுகிலும் உள்ள குரங்குகளுக்கு உணவு அளிப்பதாக நினைத்து அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கொடுக்கின்றனர்.

இதனால் குரங்குகளின் உணவுப் பழக்கம் மாறுவதுடன், அவற்றுக்கு செரிமானப் பிரச்சினையும் ஏற்படுகிறது. இதையடுத்து மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் மலைப் பாதையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக-கேரள எல்லையில் ஒலி பெருக்கிகள் மூலம் இதுகுறித்து விழிப்புணர்வு அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுகின்றன.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகளுக்கு உணவு தரக் கூடாது என்பது நிரந்தரமான அறிவிப்புதான். இருப்பினும் ஆர்வத்தில் பக்தர்கள் பலரும் மிக்சர், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள், புளியோதரை, மைதா மாவால் தயாரிக்கப்பட்ட உணவுகளை அளிக்கின்றனர். இதை கைப்பற்றுவதில் குரங்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனத்தில் அடிபட்டு குரங்குகள் இறக்கின்றன. இதை தடுப்பதற்காக தற்போது மலைச் சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x