Published : 07 Jan 2024 09:00 AM
Last Updated : 07 Jan 2024 09:00 AM
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய பட்டா நிலத்தை, வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய நிலையில், ’இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, நிலத்தின் மீதான உரிமையை வக்பு வாரியம் விலக்கிக் கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அங்கணகவுண்டன்புதூர் கிராமத்தில், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு 71 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அப்போது தொடங்கி, இங்கு வீடுகட்டி வசித்து வந்த மக்கள், கொம ராபாளையம் ஊராட்சிக்கு வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தி வந்துள்ளனர். இங்கு அரசின் வீட்டுமனைப் பட்டா பெற்று குடியிருந்து வந்த ஒருவரின் மறைவை அடுத்து, அவரது வாரிசுகள் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள, சத்தியமங்கலம் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தை அணுகியுள்ளனர்.
அப்போது, ‘உங்களது வீடு அமைந்துள்ள நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது; அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வந்தால் மட்டுமே, இந்த நிலம் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள முடியும்’ என பதிவுத் துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களது பட்டா நிலத்துக்கான உரிமையை மீட்க பல்வேறு மட்டங்களில் புகார் மனுக்களை அளித்தனர். இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி, ‘அரசு வழங்கிய பட்டா நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம்’ என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, கோபி ஆர்டிஓ திவ்ய பிரியதர்ஷினி, வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலருக்கு விரிவான கடிதம் எழுதினார். இதில், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு, தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட பட்டா நிலம் இது என்பதற்கான முழுமையான தரவுகளை அனுப்பி இருந்தார். எனவே, பத்திரப்பதிவுத் துறைக்கு வக்பு வாரியம் விதித்திருந்த தடையை ரத்து செய்ய வேண்டும் என ஆர்டிஓ தெரிவித்து இருந்தார்.
இந்த விரிவான தரவுகளுடன் கூடிய கடிதம் காரணமாக, அரசு வழங்கிய பட்டா நிலத்தில் குடியிருப்போரின் நிலங்கள் தொடர்பாக, பதிவுகளை மேற்கொள்ள விதித்திருந்த தடையை வக்பு வாரியம் விலக்கியுள்ளது. இது தொடர்பாக, கடந்த டிசம்பர் 20-ம் தேதி பதிவுத்துறைக்கு தனது நிலைப் பாட்டை தெரிவித்து வக்பு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் மூலம், அங்கணக்கவுண்டன் புதூரில், ஆதி திராவிடர் நலத்துறையின் பட்டா பெற்றவர்களின் நில உரிமை மீண்டும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இப்பிரச்சினையை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் கவனத்துக்கு கொண்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் கூறியதாவது: அரசு எங்களுக்கு வழங்கிய நிலத்தின் மீதான உரிமை பறிபோய் விட்டதாக, அதிர்ச்சி அடைந்து இருந்தோம். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் முறையீடு செய்திருந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான விரிவான செய்தியால், எங்களது பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். அதோடு, வக்பு வாரியத்துக்கு உரிய தரவுகளை அனுப்பி நடவடிக்கைக்கு உதவிய ஈரோடு ஆட்சியர், கோபி கோட்டாட்சியர், வட்டாட்சியர், பதிவுத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT