Published : 07 Jan 2024 05:21 AM
Last Updated : 07 Jan 2024 05:21 AM

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த அறிவிப்பை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: பேச்சுவார்த்தை மூலம் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழகஅரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பெரிதும் அரசு பேருந்துகளை நம்பிஇருக்கும் சூழலில், தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு, பொதுமக்களை மிகவும் பாதிக்கும். உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் குறைகளை தீர்க்க வேண்டிய போக்குவரத்துத் துறை அமைச்சர் பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தையை நடத்தி கொள்ளலாம் என்று வயிற்றில் அடித்திருக்கிறார்.

பிரச்சினைகளை தீர்க்காமல் தள்ளிபோட முயற்சித்தால், போக்குவரத்து தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாமா. எனவே காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தையில் குறைகளை களைய தமிழக அரசு முன்வர வேண்டும். பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து வசதி இன்றி மக்கள் அவதிப்படுவதை தவிர்க்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமானகோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி, அவர்களது வேலைநிறுத்த போராட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது திமுக அரசின்தொழிலாளர் நலன் விரோதப் போக்கை காட்டுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பண்டிகை நேரத்தில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். எனவே நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x