Published : 06 Jan 2024 08:43 PM
Last Updated : 06 Jan 2024 08:43 PM
மதுரை: ‘பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களால் சதிக்க முடியாதது என எதுவும் இல்லை’ என ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் சக்தி சங்கமம் மாநாடு, ராஜா முத்தையா மன்றத்தில் இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பகவத் கீதை சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவி தாசி தலைமை வகித்தார். மாநாட்டு நிறைவு விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசியது: “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கப்போகிறது. முன்பு ஆட்சி செய்தவர்கள் பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்றனர். ஆனால் பிரதமர் மோடியோ, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளார்.
குடும்பத் தலைவிகளாக இருப்பவர்களால் தான் நாட்டின் தலைவிகளாக இருக்க முடியும். குடும்பங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பெண்கள், முதலில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். குடும்ப உறவும், குடும்ப பாதுகாப்பும் பொதுவாழ்வுக்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கின்றனர். பெண்கள் வாழ்வில் முன்னேறுவது சுலபமல்ல. பெண்களின் பாதை மலர் பாதை அல்ல. கற்கள், முட்கள் நிரம்பிய பாதை.
பெண்களின் அறிவு, திறமை, ஆற்றலை யாரும் பாரப்ப்து இல்லை. நிறம், அழகு, உயரத்தை பார்க்கின்றனர். வெளித்தோற்றம் வீணாபோச்சு. உள்ளத்தை உறுதியாக வைத்திருந்தால் சக்தி மிகுந்தவராக மாறலாம். பெண்களுக்கு சக்தி பிறப்பில் இருந்தே வருகிறது.நிர்வாகத்தில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக இருப்பார்கள். ஆண்களால் பெண்களை சமாளிப்பது சிரமம். பெண்களால் ஆண்களையும், பெண்களையும் சுலபமாக சமாளித்துவிடலாம். வலியை தாங்கும் வலிமை எந்த பெண்ணுக்கு இருக்கிறதோ, அந்தப் பெண் எதிர்காலத்தில் வலிமையானவராக மாறுவார். பெண்கள் மகப்பேறு என்ற வலியை தாங்குகின்றனர்.
பொது வாழ்க்கையில் வரும்போது பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும். வீட்டை நிர்வகிக்கும் பெண்களால் நிச்சயமாக நாட்டையும் நிர்வகிக்க முடியும். பெண்களால் அவியலும் செய்ய முடியும், அரசியலும் செய்ய முடியும். உலகில் பெண்களால் சாதிக்க முடியாதது என எதுவும் இல்லை. இல்லம் என்ற கூட்டை தாண்டி என்னாலும் முடியும் என்று பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வர வேண்டும்.
இந்திய காலாச்சாரமும், பண்பாடும் முக்கியமானது. இவற்றை பெண்கள் மறக்கக்கூடாது. இந்த கலாச்சாரமும், பண்பாடும் தான் மக்களை கரோனாவில் இருந்து காப்பாற்றியது. இந்தியாவின் உணவு முறை தான் கரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றியது. பெண்களுக்கு உடல் நலன் முக்கியம். குழந்தைக்கு சத்தான உணவை சமைத்துக்கொடுத்து, பெண்களும் சத்தான உணவை சாப்பிட வேண்டும். தமிழக உணவு போல் சத்தான உணவு உலகில் எங்கும் கிடையாது. எதற்காகவும் மகிழ்ச்சியை குறைக்க வேண்டாம்.
எல்லாவற்றும் மேலானது தன்னம்பிக்கையை எந்த இடத்திலும் விட்டுவிடக்கூடாது. தும்பிக்கையை விட மேலானது தன்னம்பிக்கை. வாழ்வில் எத்தனை சோதனைகள், தடங்கல் வந்தாலும் பெண்கள் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது” என்று அவர் பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, சாகித்யா சேவா பிரமுக் விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த கீதாரவி, தேசிய மாற்றுத்திறனாளி துறையின் ஆலோசகர் காமாட்சி சுவாமிநாதன், தேசிய ஒருங்கிணைப்பாளர் பாக்கியஸ்ரீ, மாநில ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, ஒருங்கிணைப்பாளர் உமாராணி, உமா முருகன், வைரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பேசினார். மாநாட்டின் தலைவர் மூத்த வழக்கறிஞர் என்.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT