Last Updated : 06 Jan, 2024 05:24 PM

8  

Published : 06 Jan 2024 05:24 PM
Last Updated : 06 Jan 2024 05:24 PM

“ஒரு பதிவுக்கு ரூ.5,500 வசூல்... தமிழக பத்திரப் பதிவு துறையில் இமாலய ஊழல்” - அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரையில் நடந்த பாஜக ஒருங்கிணைந்த அணிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை

மதுரை: ‘தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இமாலய ஊழல் நடைபெறுகிறது. ஒரு பத்திரப் பதிவுக்கு ரூ.5,500 வசூலிக்கப்படுகிறது’ என மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.9 முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறையில் 35,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியிலுள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அதிக வேலைப்பளுவை சந்தித்து வருகின்றனர். பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 800 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திமுக அரசில் போக்குவரத்து கழகம் நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்க வேண்டிய இலவச பயணத்துக்கான மானியம் கொடுக்கப்படவில்லை. கடன் சுமை அதிகரித்துள்ளது. சம்பளத்தை உயர்த்த முடியயில்லை. காலியிடங்களை நிரப்ப முடியவில்லை. வருவாய் வட்டி கட்டவே சரியாக போய்விடுகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் மாநில அரசு உடனடியாக தலையிட வேண்டும். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்தாலும், வேலை நிறுத்தம் நடந்தால் என்ன ஆகும் என யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜன.8-க்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமுக முடிவு எட்டப்பட வேண்டும். 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேட்டுக்கு பதிலாக கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்துக்கு காளை வளர்ப்போர்கள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் செல்ல தயாராக இல்லை. இந்த மைதானத்தை வேறு விதத்தில் பயன்படுத்த அரசு யோசிக்க வேண்டும். மைதானத்துக்கு கலைஞர் பெயர் சூட்டுவதை பாஜக கண்டிக்கிறது. தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும் பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களை சூட்டுகின்றனர். இதை அனுமதித்தால் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த 3 பெயர்களை மட்டும் சூட்ட வேண்டும் என சட்டம் நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது திமுக, காங்கிரஸ். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. அந்த மைதானத்துக்கு ஜல்லிக்கட்டுக்கு பாடுபட்டவர்களின் பெயரை சூட்ட வேண்டும்.

தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்று வருகிறது. ஒரு பத்திரத்துக்கு ரூ.5500 வசூலிக்கிறார்கள். இதை அமைச்சருக்கான கட்டணம் என்கின்றனர். தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் லாபி நிலவுகிறது. சில புரோக்கர்களை பார்த்து பணம் கொடுத்தால் இரவு 6 மணிக்கு மேலும் பத்திரப் பதிவு செய்யலாம். பத்திரப் பதிவுத்துறையில் ஊருக்கு ஊர் ஒரு புரோக்கர் உள்ளனர்.

தமிழக பத்திரப் பதிவுத்துறையை மிக மோசமாகவும், பணம் வசூலிக்கும் துறையாகவும் துறையின் அமைச்சர் மாற்றி வைத்துள்ளார். இதை கண்டித்து பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு முன்பு பாஜக போராட்டம் நடத்தும். பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் மாலை 5 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் கட்டு கட்டமாக பணம் எடுக்கலாம். இப்பணத்தை வைத்து தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம்.

பிரதமர் மோடி என்ற மனிதருக்குதான் ஓட்டு. 2024 மக்களவைத் தேர்தல் மோடிக்கான தேர்தல். தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். மோடியை ஏற்றுக்கொள்பவர்கள் பாஜக கூட்டணிக்கு வரலாம். அந்தக் கட்சிகளை கூட்டணிக்கு வேண்டாம் என்று சொல்ல முடியாது. பாஜக கூட்டணியை தேசிய தலைமை முடிவு செய்யும். கூட்டணி பெரிதாக இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பது சரியல்ல. திமுக கூட்டணி பெரிதாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் பல கட்சிகளின் அரசியல் காலம் முடியப்போகிறது. தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது.

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி உதவியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளி விபரத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்கள் பிஹாரை விட மோசமாக உள்ளன. அந்த மாவட்டங்களில் ஒரு வளர்ச்சி திட்டங்கள் கூட இல்லை. தமிழகத்தின் நிதி பகிர்வு அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதா? இதற்கு தமிழக முதல்வர், அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும். வளர்ச்சி அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டும். வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் வளர்ச்சி தேங்கக்கூடாது. அதற்காக பாஜக பாடுபடுகிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. இது தேர்தல் நாடகம். முதல்வரின் துபாய், சிங்கப்பூர் பயணத்தால் வர வேண்டிய பணம் இன்னும் வரவில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக அரசு இதுவரை நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டினால் மாநிலத்துக்கு கிடைத்தது என்ன என்பதை விளக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அதிகாரபூர்வமாக வேலை முடியும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் நிலம் வழங்குவதில், கரோனால் தாமதம் ஏற்பட்டது. திமுக வாக்குறுதி அளித்த கிருஷ்ணகிரி சிப்காட், மதுரை கால்நடை கல்லூரி என்ன ஆனது என்பதை திமுக தெரிவிக்க வேண்டும்.

தமிழக விமான நிலையங்களின் மேம்பாடு மற்றும் அதற்கான தேவைகள் குறித்து முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியதில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை. பிரதமர் மோடி தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் தமிழ் மீது ஆர்வம் காட்டுவதால் அவரும் தமிழர்தான். அவர் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைப்பார்” என்று அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x